நம்பிக்கையில்லா பிரேரணை 94 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் 94 மேலதிக வாக்குகளால் தோற் கடிக்கப்பட்டது. இப்பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 151 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பாராளுமன்றம் நேற்று பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் கூடியபோது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான இரண்டாவது நாள் விவாதம் ஆரம்பமானது. போதைவஸ்து கடத்தலில் இலங்கை தெற்காசியாவின் கேந்திரநிலையமாக மாறி வருவதாகவும், போதைவஸ்து கடத்தலைத் தடுக்க இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதெனவும் கூறி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை நேற்றுமுன்தினம் சமர்ப்பித்திருந்தது.
இப்பிரேரணையை ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா சமர்ப்பித்து உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து ஆளும் தரப்பு எம்.பிக்கள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினர். இரண்டாவது நாளான நேற்று அரசு சார்பில் உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, போதைவஸ்து பாவனை மற்றும் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் போதியளவு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், எதிர்க்கட்சி அடிப்படையற்ற காரணத்தை முன்வைத்து அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்திருப்பதாகக் கூறினார்.
கடல்மார்க்கமாகவும், விமானம் மூலமாகவும் இலங்கைக்குள் கடத்தப்படும் போதைவஸ்துக்களைக் கண்டுபிடிக்கவும், கடத்தல்களைத் தடுப்பதற்கும் கடந்த காலங்களில் சுங்கத் திணைக்களம், போதை ஒழிப்புப் பிரிவு (நாக்கோர்ட்டிக்) பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் கூட்டாக நாடுதழுவிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது என்றும் தெரிவித்தார்.
நேற்றுமாலை 5 மணியளவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கள் ஆரம்பமாகின. எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோன் அமரதுங்க பெயர்குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரதி சபாநாயகர் பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தினார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி என்பன பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகிய கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தன. ஐக்கிய தேசியக் கட்சியின் எம்பிக்களான கரு ஜயசூரிய, மங்கள சமரவீர ஆகியோர் நேற்று பாராளுமன்றத்திற்கு சமுகமளித்திருக்கவில்லை. ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரான எல்லாவல மேதானந்த தேரர் அரசுக்கு ஆதரவாக (பிரேரணைக்கு எதிராக) வாக்களித்திருந்தார்.
நேற்றைய விவாதத்தில் அமைச்சர்களான டிலான் பெரேரா, சந்திரசிறி கஜதீர, ரோஹித்த அபேகுணவர்தன, டியூ.குணசேகர, சுசில் பிரேமஜயந்த. டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பிரேரணையை எதிர்த்து உரையாற்றினர். இந்தப் பிரேரணை தொடர்பில் ஐ.தே.க பதுளை மாவட்ட எம்.பி ஹரின் பெர்னான்டோ பதிலளித்துப் பேசியதையடுத்து வாக்கெடுப்பு நடத்தப்படது.
அரசாங்கத் தரப்பில் அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாட்டலி சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய, பிரதியமைச்சர் வீரக்குமார திசாநாயக்க, முஸ்லிம் காங்கிரஸ் எம்.பியான ஹசன் அலி, புத்தளம் மாவட்ட எம்பியான அருந்திக பெர்னான்டோ ஆகியோர் நேற்று பாராளுமன்றத்துக்கு சமூகமளித்திருக்க வில்லை. இதேபோன்று எதிர்க்கட்சி சார்பில் பா.அரியநேந்திரன், டிரான் அலஸ், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஸ்ரீதரன் ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.பி.பாரூக், அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோரும் பாராளுமன்றத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply