ஆசியாவின் நெருக்கடிகளைத் தீர்க்க பிராந்திய நாடுகளின் ஒன்றுபட்ட செயற்பாடுகள் அவசியம் : மஹிந்த ராஜபக்ஷ
பிராந்தியத்தின் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புகையில் நாடுகளின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பது அவசியமாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கங்களின் இந்த அடிப்படை உரிமை உலகெங்கிலும் மீறப்படுவது கவலைக்குரியதாகும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, அற்ப நோக்கம் கொண்ட சில வெளிச் சக்திகள், ஜனநாயகம் என்ற போர்வையில் நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இத்தகைய செயற்பாடுகளால் நாடுகளும் பிராந்தியங்களும் நிலையற்ற தன்மைக்கு உள்ளாக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் தெரிவித்தார். சீனாவில் நடைபெற்றுவரும் சீ.ஐ.சீ.ஏ. சர்வதேச மாநாட்டில் சிறப்புரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
இம்மாநாட்டில் சீன ஜனாதிபதி ஹீ ஜிங்பிங் ஆற்றிய உரையில் ஆசியாவின் உள்ளக செயற்பாடுகள் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவது தொடர்பில் பிராந்திய ஒத்துழைப்புக்கான பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப் பட்டன. இதற்கு ஆசிய பாதுகாப்பு தொடர்பான எண்ணக்கரு முக்கியமான தாகிறது.
ஆசியாவின் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு இக்கண்டத்திலுள்ள நாடுகள் முன்னின்று செயற்படுவது முக்கியமாகும். சீன ஜனாதிபதி தெரிவித்துள்ள ஆலோசனைகளுக்கிணங்க ஆசியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள பல்தரப்பு பொறிமுறையொன்றை உருவாக்குவது இந்த மாநாட்டின் அங்கத்துவ நாடுகளுக்குரிய முக்கியமான கடமைப்பாடாகும்.
ஆசியா துரித முன்னேற்றம் கண்டுவரும் பலமான பிராந்தியமாகும். இதனால் சர்வதேசத்தின் கவனமும் இதன்மீது நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், பிராந்தியத்திற்கு உள்ளும் வெளியிலும் பெரும் சவால்கள் உருவெடுக்கின்றன. பிராந்தியத்தின் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புகையில் நாடுகளின் இறைமை மற்றும் ஆட்புலத் தொடர்பையும் பாதுகாக்க வேண்டியது அத்தியாவசியமான தாகும். எனினும் அரசுகளின் இந்த அடிப்படை உரிமை உலகம் முழுவதிலும் மீறப்படுகின்றமை கவனத்திற்குரியதாகும்.
ஜனநாயகம் என்ற போர்வையில் சில வெளிச்சக்திகள் உள்நாட்டு நடவடிக்கைகளில் தலையிட முயற்சிக்கின்றன. நாடுகளையும் பிராந்தியங்களையும் நிலையற்ற தன்மைக்கு உள்ளாக்குவதே இந்த சக்திகளின் நோக்கமாகும். உலகளாவிய ரீதியில் வர்த்தக மற்றும் மூலோபாய தன்மைகளை அடைந்து கொள்வதே இந்த சக்திகளது நோக்கமாகும்.
உள்ளக ஒற்றுமையை சீர்குலைப்பதே அவர்களது முதலாவது நடவடிக்கையாகும். இத்தகைய உள்ளக அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கும் இணையத்தினூடான குற்றச் செயல்களை மேற்கொள்வதற்கும் இணையம் உள்ளிட்ட சமூக ஊடக வலையமைப்பை மோசமான வகையில் பயன்படுத்துவதை எம்மால் காண முடிகிறது. இளம்பராயத்தினரை இலக்காகக் கொண்டே அவர்கள் செயற்படுகின்றனர். வெளிச் சக்திகளின் நிகழ்ச்சி நிரலின் பகடைக்காய்களாக அவர்கள் பயன்படுத்துகின்றனர். இம்மாநாட்டின் மூலம் இது தொடர்பில் ஆக்கபூர்வமாக ஆராயப்பட வேண்டும்.
அங்கத்துவ நாடுகள் குறித்த நிறுவனங்களுக்கிடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்வதும் ஒத்துழைப்புக்கான தொடர்புகளை பலப்படுத்திக் கொள்வதும் அவசியமானதாகும். மூன்று தசாப்தங்களாக நிலவிய கொடூர பயங்கரவாதத்தை இற்றைக்கு 5 வருடங்களுக்கு முன்னர் நாம் இல்லாதொழித்துள்ளோம். எமது நண்பர்களின் ஒத்துழைப்பும் உதவியும் கிடைத்திருக்காவிட்டால் எனது நாடு இந்த சவாலை வெற்றி கொண்டிருக்க முடியாது.
எவ்வாறாயினும் சமாதானத்திற்கும் ஸ்திரத்தன்மைக்கும் சுபீட்சத்திற்கும் எதிரான உலக சவாலை வெற்றி கொள்வத ற்காக நல்லெண்ணமும் சகோதரத்துவமும் இன்றைய தேவையாக உள்ளது. தனது மண்ணில் பிரிவினைவாத, தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை தடுப்பதற்கும் அங்கத்துவ நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்படுவதற்கும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கும் இந்த மாநாடு அதன் அங்கத்துவ நாடுகளுக்கு பொருத்தமான மேடையாக அமையுமென நான் நம்புகிறேன்.
ஒரு நாட்டின் அல்லது பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் சமாதானம், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை போன்றவை மிக முக்கியமானதாக அமைகின்றன. இதனைக் கருத்திற் கொண்டு சமாதானம் மிகுந்த நிலையான புதிய ஆசியாவை உருவாக்குவதற்காக நாம் இணைந்து செயற்பட வேண்டியது அவசிமாகும். இளைஞர்களை எமது கொள்கை வகுப்புகளில் முன்னுரிமைப்படுத்த வேண்டும். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டின் பெறுபேறுகள் இதற்கு வழிசமைத்துள்ளதென நான் நம்புகிறேன்.
அரசுகளின் இறைமைக்கு அச்சுறுத்தல் விடுத்து தேசிய தேச எல்லைகளை நடந்து செல்கின்ற பல்தேசிய அமைப்பு ரீதியான குற்றச் செயல்கள் பயங்கரவாதம் மற்றும் அதற்கு நிதிகளைப் பயன்படுத்தல், போதைவஸ்து வர்த்தகம், ஆட்கடத்தல் சட்ட விரோத பண கொடுக்கல் வாங்கல் போன்ற பெரும் அச்சுறுத்தலாகியுள்ளமை தெளிவாகிறது.
வெளி சக்திகளினால் நாடுகளின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு வலுவான ஒத்துழைப்பு அவசியமாகும். ஆசியாவில் உள்ள நம்பிக்கையை கட்டியெழுப்புகின்ற மாநாட்டின் அங்கத்தினர்கள் இது தொடர்பில் செயலாற்ற முடியுமென்பது எனது நம்பிக்கையாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply