போராட்டத்துக்கு தயார் ஆகுங்கள்: காங். கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இங்கு முறையே சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் அமேதி மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காக, தேர்தலுக்குப்பின் முதன்முறையாக நேற்று ராகுல் காந்தி அமேதி சென்றார். அவருடன் பிரியங்காவும் உடன் சென்றார். அமேதி தொகுதிக்கு உட்பட்ட கவுரிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகளுடன் அவர்கள் விரிவான ஆலோசனை நடத்தினர்.
அப்போது, தற்போதைய தேர்தலில் ராகுல் காந்தியின் வெற்றி வித்தியாசம் குறைந்தது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சுட்டிக்காட்டினர். இந்த தேர்தலில் பிரியங்கா கூட பிரசாரம் மேற்கொண்ட பிறகும், வெற்றி வித்தியாசம் குறைந்தது குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அமேதி தொகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ராகுல் காந்தி 3 லட்சத்து 70 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் தற்போதைய தேர்தலில் வெறும் 1 லட்சத்து 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே அவரால் வெற்றி பெற முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘மக்கள் நலனுக்கு எதிராக எந்த வித நடவடிக்கையும் மேற்கொண்டால், காங்கிரஸ் கட்சி மீண்டும் போராட்டம் நடத்தும். எனவே போராட்டத்துக்கு நீங்கள் தயாராகுங்கள்’ என்றார்.
கூட்டத்துக்குப்பின் ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது சோதனை காலம் என்றபோதிலும், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்கள், எங்கள் மீது நம்பிக்கை வைத்து காங்கிரசை ஆதரித்துள்ளனர். அதற்காக நான் அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
காங்கிரஸ் தலைவர்கள் கூறியபடி, கட்சியின் செயல்பாடுகள் குறித்து மறு ஆய்வு நடத்த விரைவில் கூட்டம் ஒன்று நடத்தப்படும். இது போராட வேண்டிய தருணம். நாங்கள் நிச்சயமாக போராடுவோம்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
இது குறித்து பிரியங்கா பேசும்போது, ‘அமேதி மக்கள் எங்கள் மரியாதையை காத்துள்ளனர். எனவே அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றார்.
முன்னதாக கட்சி அலுவலகத்தில் வைத்திருந்த ராஜீவ் காந்தியின் படத்துக்கு, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அங்குள்ள பரோலியா கிராமத்தில் கடந்த 19-ந் தேதி நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply