ஜனாதிபதி மஹிந்த நாளை புதுடில்லி பயணம் நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பு

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாளை 25 ஆம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்வு நாளை மறுதினம் 26 ஆம் திகதி புது டில்லியில் நடை பெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு நரேந்திர மோடி விசேட அழைப்பு விடுத்துள் ளார். இந்த அழைப்பை ஏற்றே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாளை புதுடில்லி பயணமாகிறார்.

அதேவேளை புதிய இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து செல்லும் ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனையும் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்படி அழைப்பிற்கு பதிலளித்துள்ள வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், இது தொடர்பான தீர்மானத்தை உடனடியாக தெரிவிக்க முடியாதுள்ளதாகவும் வட மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் தமது முடிவை உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியுமெனவும் குறிப்பிட்டி ருந்தார். இலங்கைக்கு மிக நெருங்கிய அயல் நாடு என்ற வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் வரலாறு தொட்டு சிறந்த நட்புறவு தொடர்கிறது.

இந்த வகையில் இம்முறை தேர்தலில் அமோக வெற்றியீட்டி புதிய இந்திய பிரதமராகியுள்ள நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டதுடன் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

நரேந்திர மோடியின் அமோக வெற்றி குறித்து தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஸ்திரமான அரசாங்கமொன்றின் மூலமே நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் நரேந்திர மோடி தமது கட்சிக்குக் கிடைத்த பெரும்பான்மை பலத்தை வைத்து ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை அமைப்பார் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து டுவிட்டரில் இதற்குப் பதிலளித்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி தம்முடன் தொலைபேசி மூலம் உரையாடியமை தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் இரு நாடுகளுக்குமான உறவை மேலும் பலப்படுத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். தேர்தல் வெற்றியையடுத்து இந்தியப் பிரமருக்கு உலக நாடுகளின் தலைவர்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே முதன் முதலாக வாழ்த்துத் தெரிவித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்ளச் செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புதிய இந்தியப் பிரதமர் உட்பட முக்கியஸ்தர்கள் பலருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்த விஜயம் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான நட்புறவை மென்மேலும் பலப்படுத்துவதுடன் இரு நாடுகளின் உறவில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் அடையும் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று எட்டு சார்க் நாடுகளில் ஏழு நாடுகளின் தலைவர்கள் அவரது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள வுள்ளனர். இவர்களுள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முக்கியமான ஒருவராகக் கருதப்படுகிறார். சார்க் நாடுகளில் பாகிஸ்தானைத் தவிர ஏனைய ஏழு நாடுகளின் தலைவர்களும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதை வெளியுறவுத்துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஏழு நாடுகளினதும் தலைவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இரவு விருந்து பசாரம் அளித்து கெளரவிக்கவுள்ளமை குறிப்பித்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply