விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்தது நியாயமானதே : மனோ கணேசன்
வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை 26ம் திகதி நடைபெறவுள்ள இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள விசேட ஒரு விருந்தினராக இந்திய அரசே நேரடியாக அழைத்திருக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த முயற்சியில் தமிழக தலைவர்கள் இந்த கடைசி தருணத்திலாவது ஈடுபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கருத்து கூறியதாவது,
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் குழுவில் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கலந்து கொள்ள முதல்வர் விக்கினேஸ்வரன் மறுப்பு தெரிவித்தமை நியாயமான ஒரு நிலைப்பாடாகும். வடக்கில் மாகாணசபை நடப்புகள் சுமூகமான முறையில் 13ம் திருத்தத்தின்படி நடைப்பெற்று இருக்குமானால், முதல்வர் ஜனாதிபதியுடன் கரங்கோர்த்து புதுடில்லி சென்றிருக்க முடியும்.
ஆனால், வடக்கில் மாகாண செயலாளரைகூட நியமிக்க முடியாத முதல்வர் விக்கினேஸ்வரன் இலங்கை ஜனாதிபதியின் குழுவில் எப்படி செல்ல முடியும்? எனவே வடக்கு முதல்வர் இன்று இலங்கை அரசின் அழைப்பை ஏற்காமைக்கு இலங்கை அரசே முழுபொறுப்பேற்க வேண்டும்.
தெற்காசிய அரச தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் அதேவேளையில், பிறிதொரு மட்டத்தில் விசேட ஒரு விருந்தினராக வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் கலந்து கொள்ளலாம். அவரை இந்திய அரசுதான் அழைக்க வேண்டும். இத்தகைய அழைப்பு விடுக்கப்பட முன்னுதாரணம் இருக்கின்றதா என தேட தேவையில்லை.
வடக்கு மாகாணசபை உருவாக வழியேற்படுத்தியதே, இலங்கை-இந்திய ஒப்பந்தம் என்பதால் இத்தகைய அணுகுமுறை கையாளப்படலாம். இதன்மூலம் தெற்காசிய ஒத்துழைப்பு நோக்கில் இலங்கை ஜனதிபதியை அழைக்கும் இந்திய அரசு, அதேவேளையில் இலங்கை தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் தமக்குள்ள கடப்பாட்டையும் தெளிவுபட வெளிப்படுத்தலாம்.
எனவே புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள விசேட ஒரு விருந்தினராக வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரனை இந்திய அரசை கொண்டு நேரடியாக அழைக்க வைக்கும் முயற்சியில் தமிழக தலைவர்கள் இந்த கடைசி தருணத்திலாவது ஈடுபட வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply