இந்தியாவின் 15ஆவது பிரதமர் மோடி இன்று பதவியேற்பு

இந்தியாவின் 15வது பிரதமராக பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி இன்று பதவியேற்கிறார். இவரது பதவியேற்பு விழா இன்று மாலை 6 மணிக்கு இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நடைபெறவுள்ளது. சுமார் 70 நிமிடங்கள் நடைபெறவிருக்கும் இந்தப் பதவியேற்பு விழாவில் பிராந்திய நாடுகளின் தலைவர்கள் உட்பட சுமார் 4000 பேர் கலந்துகொள்ளவுள்ளனர். 5000ற்கும் அதிகமான பொலிஸார், துணை இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்தப் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய், மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன், பூட்டான் பிரதமர் ஷெரிஸ் தாப்கே. நேபாள பிரதமர் சுசில் கொய்ராலா, பங்களாதேஷ் பாராளுமன்ற சபாநாயகர் ஹரீன் எஸ்.சவுத்திரி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இலங்கை ஜனாதிபதியுடன், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், யாழ். மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் இந்தியா செல்கின்றனர்.

இது மட்டுமன்றி இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதிகளான அப்துல் கலாம், பிரதீபா பட்டேல், முன்னாள் இந்திய பிரதமர்களான மன்மோகன் சிங், தேவகவுடா உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான அரசியல் பிரமுகர்கள் ஒரே இடத்தில் கூடவிருப்பதால் ஒருபோதும் இல்லாதளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல மட்டங்களிலான பாதுகாப்புக்கள் செய்யப்பட்டிருப்பதாகவும், பதவியேற்பு நிகழ்வு ஆரம்பிப்பதற்கு 5 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே நிகழ்வு நடைபெறும் பகுதியில் போக்குவரத்து இடைநிறுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவன் இன்று பிற்பகல் 1 மணிக்கு மூடப்பட்டு பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாக டில்லி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு அருகில் வான் பாதுகாப்பு ராடர்கள் பொருத்தப்படவிருப்பதுடன், உயரமான கட்டடங்களில் சினைப்பர் குழுவினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருப்பார்கள் என விமானப்படை அறிவித்துள்ளது. நிகழ்வு நடைபெறும் பகுதி மட்டுமன்றி வெளிநாட்டுத் தலைவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து நாளையதினம் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, சார்க் நாடுகளின் தலைவர்களைத் தனித்தனியாகச் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிரதமரான பின்னர் மோடி கலந்துகொள்ளும் முதலாவது இராஜதந்திர ரீதியான சந்திப்புகளாக இது அமையவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோருடனான சந்திப்புக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையில் காணப்படும் முறுகல் நிலைக்கு எதிர்காலத்தில் முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஆரம்பமாக இது அமையும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டு கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply