வவுனியா புதிய கற்பகபுர காணிப் பிரச்னை சம்பந்தமாக ஸ்ரீ ரெலோ கட்சி விடுத்துள்ள பொதுமக்கள் விழிப்புணர்வு அறிக்கை!!

வவுனியா புதிய கற்பகபுரம் காணிப்பிரச்சினை குறித்து ஸ்ரீ ரெலோ கட்சி விடுத்துள்ள பொதுமக்கள் விழிப்புணர்வு அறிக்கை வருமாறு. வவுனியாவில் வாழ்கின்ற பாதிக்கப்பட்ட காணிகள் அற்றவர்களுக்கு புதிய காணிகளை வழங்குவதற்காக ஸ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா அவர்களின் அயராத முயற்சியின் பயனாக பசில் ராஜபக்ஸ அவர்களினூடாக அனுமதியினை பெற்று 2009, 2010 காலப்பகுதியில் “புதிய கற்பகபுரம்” எனும் கிராமத்தை உருவாக்கி நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு புதிய காணிகள் வழங்கப்பட்டது.

காணிகள் வழங்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்றும் எமது அமைப்பின் உறுப்பினர்கள் என கூறிக் கொள்ளும் சிலர் மக்களின் காணிகளை விற்பனை செய்வதாகவும், காணிப் பிணக்குகளில் தலையிடுவதாகவும், உரிமையாளர்களின் அனுமதியின்றி காணிகளை பிறருக்கு உரிமை மாற்றம் செய்வதாகவும், உரிமையாளர்கள் இல்லாத காணிகளை கையகப்படுத்துவதாகவும் எமது அலுவலகத்திற்கும் செயலாளர் நாயகம் திரு ப.உதயராசா அவர்களுக்கும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எனவே இது தொடர்பில் மக்களை தெளிவு படுத்த வேண்டிய நிலை எமது ஊடகப்பிரிவிற்கு ஏற்பட்டுள்ளது.

எமது அமைப்பு காணிகளை மக்களுக்கு வழங்கிய நாள் முதல் யார் யாருக்கு காணிகள் வழங்கப்பட்டனவோ அவர்களே காணியின் முழு உரித்துடையவர்களாவர்.

காணி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் உங்களையே சாரும் என்பதுடன் நாங்கள் எங்களது அமைப்பு சார்பாக யாரையும் காணி விடயங்களை கையாள உத்தியோகபூர்வ அதிகாரத்தினை வழங்கவில்லை.

எனவே எமது கட்சியின் பெயரை கூறி உங்களிடம் காணி அல்லது நிதி மோசடியில் ஈடுபட்டிருந்தால் அது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மோசடியில் ஈடுபட்டவரின் பெயரில் முறைப்பாடுகளை பதிவுசெய்து உங்களுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன் நீங்கள் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்கு கட்சியும் கட்சியின் செயலாளரும் பூரண அனுசரணை வழங்க காத்திருப்பதுடன் இனியும் பொது மக்கள் யாரிடமும் பணக்கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட வேண்டாமெனவும் கேட்டுக் கொள்வதுடன் எங்களது அறிவுறுத்தல்களையும் மீறி தனி நபர்களிடம் பணப்பரிமாறங்களை மேற்கொள்வதனால் ஏற்படும் இழப்புக்களுக்கு கட்சி நிர்வாகம் பொறுப்பேற்க மாட்டாது என்பதனையும் அறியத் தருகின்றோம்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply