மோடி தலைமையில் புதிய உச்சத்தை இந்தியா எட்டும்: அமெரிக்க இணை அமைச்சர்
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய-அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான உறவு வலுப்பெறுவதுடன், உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் புதிய உச்சத்தை எட்டும் என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் நிஷா தேசாய் பிஸ்வால் கூறியதாவது. இந்தியாவில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் வலிமையான, உறுதியான ஆட்சிக்கு மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.
இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்தக் கூட்டு செயல்பாட்டின் மூலம் இரண்டு நாடுகளும் பயன்பெறுவதுடன், உலக நாடுகளையும் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் திறன் ஏற்படுகிறது.
தான் என்ன செய்ய வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலை மோடி வகுத்துக் கொள்வார் என்று நம்புகிறோம். அவரை வரவேற்க ஆவலுடன் இருக்கிறோம்.
பிரதமராக பதவியேற்ற பின்னர், முதல் பயணமாக ஜப்பான், சீனா அல்லது வங்கதேசத்திற்கு மோடி செல்வார் என்றும் முதல் பயணமாக அமெரிக்கா செல்ல மாட்டார் என்றும் கூறப்படுவது சரியல்ல. அப்படியே அவர் அந்நாடுகளுக்குச் சென்றாலும் அது எங்களுக்கு கவலை அளிக்காது. பொருளாதார வாய்ப்புகளை பெருக்கி, அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைக்கும் வாய்ப்பாக இந்தத் தேர்தல் தீர்ப்பு அமைந்திருப்பதாக நம்புகிறோம் என்றார் நிஷா தேசாய் பிஸ்வால்.
இந்நிலையில், மத்திய ஆசிய நாடுகளில் நிஷா தேசாய் விரைவில் பயணம் மேற்கொள்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு அவர் பயணம் மேற்கொண்டால் கண்டிப்பாக புது தில்லி வருவார் என்றும், மோடி அரசைச் சந்திக்கும் அமெரிக்க அரசின் முதல் உயர் பிரதிநிதியாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply