மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண உயர் அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை இருநாட்டுத் தலைவர்களும் இணக்கம்

இலங்கை இந்திய மீனவர்கள் விவகாரத்தில் இரு நாட்டு மீனவர்களுக் கிடையிலான பேச்சுவார்த்தை களும் அதிகாரிகளின் இணைந்த குழு சந்திப்புகளும் நிரந்தர தீர்வொன்றுக்கு வழிவகுக்கும் என்பதில் இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இரு நாட்டு மீனவர்களினதும் கருத்துக்களை கவனத்திற் கொண்டு தீர்வு பெறுவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று புதுடில்லியிலுள்ள ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்றது.

இதற்கு வருகைதந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இந்தியப் பிரதமரினால் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது. இரு நாட்டுத் தலைவர்களும் இரு நாட்டுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் முக்கியமான கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இலங்கையின் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், மீள்அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்தியப் பிரதமருக்குத் தெளிவுபடுத்தினார். அத்துடன், இலங்கையில் தற்போது நிலவும் ஐக்கிய, சமாதான சூழல் தொடர்பிலும் விளக்கினார்.

இரு நாட்டுத் தலைவர்களினதும் இந்த சுமுகமான சந்திப்பின்போது இலங்கை இந்திய மீனவர் விவகாரம் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இரு நாட்டு மீனவர்களினதும் கருத்துக்களை கவனத்தில்கொண்டு நெருக்கடிகளுக்கு நிரந்தரமான தீர்வொன்று பெற்றுக்கொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இரு தரப்பு மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை மற்றும் அதிகாரிகள் குழுவினருக் கிடையிலான கலந்துரையாடல்களைத் தொடர்வது இதற்கு உறுதுணையாக அமையும் என்ற விடயத்தில் இரு தலைவர்களுக்குமிடையில் இணக்கம் காணப்பட்டது.

தமது பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொள்வது தொடர்பில் இந்திய பிரதமர் மோடி இலங்கை ஜனாதிபதிக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். இந்த நிகழ்வில் சார்க் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளமை சார்க் நாடுகளின் நட்புறவுக்கும், எதிர்கால நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்புக்கும் சிறந்த அடித்தளமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சார்க் பிராந்தியத்துக்கு நன்மைகளைத் தரக்கூடிய பொது விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தப்படவேண்டியது தொடர்பில் இரு தலைவர்களும் கலந்துரையாடியிருந்தனர். உலக அரங்கில் இந்த நிலைப்பாடு முதன்மைப்படுத்தப்பட்டதாகக் காணப்பட வேண்டுமென இந்தியப் பிரதமர் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்த இக்கருத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், சார்க் நாடுகளின் சாத்தியமான செயற்பாடுகளில் இந்தியத் தலைமைத்துவம் தீர்க்கமானதொன்றாக அமையும் எனவும். சார்க் நாடுகளின் எதிர்கால நடவடிக்கைகளில் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கை எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், வெளிநாட்டமைச்சின் மேற்பார்வை எம்.பி சஜின்வாஸ் குணவர்த்தன, யாழ் மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிநாட்டமைச்சின் செயலாளர் ஷேனுகா செனரவிரட்ன, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply