சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததால் நாட்டை முன்னேற்ற முடிந்தது : ஜனாதிபதி
சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க முடிந்ததனாலேயே நாட்டை முன்னேற்ற முடிந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். வெளிநாடுகளின் ஆலோசனையைப் பெற்று இங்கு செயற்படுபவர்களைப் போலன்றி, நாம் ஜனநாயக ரீதியிலும் வெளிப்படைத் தன்மையிலும் முதன்மையாகச் செயற்படுகிறோம் என தெரிவித்த ஜனாதிபதி: அழுத்தங்களற்ற சுபீட்சமான வாழ்க்கையை அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம் எனவும் தெரிவித்தார்.
அரச வளங்களை விற்பதை விடுத்து அவற்றை மீளப் பெற்று கட்டியெழுப்பியதாலேயே அதன் பிரதிபலனை மக்கள் தற்போது அனுபவிக்க முடிகின்றது என குறிப்பிட்ட ஜனாதிபதி: வெறுமனே சேறு பூசும் நடவடிக்கைகளைக் கைவிட்டு மக்களுக்கான செயற்பாடுகளில் ஒத்துழைப்பதை எதிர்க்கட்சிகள் சிந்திக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நிதியமைச்சின் 2013 ம் வருடத்திற்கான ஆண்டறிக்கையை நேற்று வெளியிட்டு வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, திறைசேரியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால் உட்பட முக்கியஸ்தர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி:
நாம் வெளியிட்டுள்ள நிதியமைச்சின் வருடாந்த அறிக்கை எமது முன்னேற்றம் மிகுந்த பயணத்தின் வெளிப்பாடாகும். நாம் இம்முறை அறிக்கையைப் பார்ப்பதற்கு முன் 2004ம் ஆண்டு அறிக்கையைப் பார்த்தால் நல்லது. பத்து பக்கங்களில் அது வெளியிடப்பட்டிருந்தது. சிலவற்றை மறைத்து ஒழித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை அது. அவ்வாறில்லையென்றால் சொல்வதற்கு எதுவுமில்லாத நிலையில் வெளியிடப்பட்ட அறிக்கையாகவே அதனை நோக்க முடியும். அன்றிருந்த நிலை அதுதான்.
நாம் தற்போது வெளியிட்டுள்ள நிதியமைச்சின் ஆண்டறிக்கை தெளிவான எதிர்கால நோக்குடன் தயாரிக்கப்பட்டது. பயங்கரவாதத்தினால் 30 வருட காலம் அழிவடைந்து அத்தோடு சுனாமியினால் அழிக்கப்பட்ட நாட்டிலேயே எமது பயணத்தை நாம் ஆரம்பித்தோம். இந்த பின்னணியைப் பார்ப்பது மிக முக்கியமானது. நாம் நாட்டைப் பொறுப்பேற்கும்போது மிகவும் பலவீனமடைந்த பொருளாதாரமே காணப்பட்டது.
இன்றுள்ள நிலையை சிலர் விமர்சிக்கின்றனர். அவர்கள் அன்றுள்ள நிலையைப் பற்றி யோசிக்கவில்லை. அன்று வர்த்தகத்துறை வீழ்ச்சியுற்று 40 ற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் விற்கப்பட்டன. பூகொடை, துல்கிரிய, வெயாங்கொடை தொழிற்சாலைகள் விற்கப்பட்டன. இவற்றை மூடாமல் கட்டியெழுப்பி இருந்தால் பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பைப் பெற்றிருக்கலாம். வேலையில்லாப் பிரச்சினைக்கும் தீர்வு பெற்றிருக்க முடியும்.
அன்றுள்ள தலைவர்களுக்கு தீர்மானம் எடுக்கக்கூடிய திராணி இருக்கவில்லை. முதுகெலும்பில்லாதவர்களே இருந்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து ஆலோசனை பெற்றே இங்கு இயங்கினர். குடிசைக் கைத்தொழில்கள் இல்லாதொழிக்கப்பட்டன. அவற்றுக்கு ஊக்குவிப்புக்கள் வழங்கப்படவில்லை. கிராமிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து மக்களின் பொருளாதாரம் கேள்விக்குரியானபோது. அம்மக்கள் நஞ்சருந்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
அன்று தேர்தல் காலங்களில் வழங்கப்படும் உறுதிமொழிகள் தேர்தல் முடிந்தவுடன் மறைந்துவிடும். தம்மைச் சூழவுள்ளவர்களின் யோசனையே நிறைவேற்றப்படும் நிலையே அன்றிருந்தது. நாம் தேர்தலில் மஹிந்த சிந்தனைக் கொள்கையை மக்களுக்கு உறுதிமொழியாக்கினோம். தேர்தல் முடிந்ததும் அதனை நாம் குப்பை கூடைக்குள் போடவில்லை. அந்த கொள்கையை நிலையாக்கிக்கொண்டு எதிர்கால பயணத்தைத் தொடர்ந்தோம். இன்று அந்த பயணம் வெற்றிகரமான பயணமாகியுள்ளது. அதனால் நாடு பெற்ற பிரதிபலன்களும் அதிகம். இவ்வாறு செய்தால் அப்படி நடக்கும். இப்படி நடக்கும் கிராமிய பொருளாதாரம் மோசமடையும் என்றெல்லாம் சிலர் விமர்சித்தார்கள்.
அன்று திட்டங்களைத் தயாரிப்பதற்கு அவர்கள் கலந்துரையாடலுக்கு அழைக்கும் குழுக்கள், வர்த்தகர்களை நாம் அறிவோம். தற்போது நாம் சகலதுறை மக்களுடனும் கலந்துரையாடுகிறோம் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களின் கருத்துக்களையும் நாம் கேட்கின்றோம். மக்கள் கருத்துகளுக்கு நாம் மதிப்பளித்து செயற்படுகின்றோம். இவ்வாறு செயற்படுவது எமது பயணத்தை இலகுபடுத்துகிறது. நாட்டின் கொள்கைகளுக்கு வரவு செலவுத் திட்டம் தயாரிப்பதற்கு சாதாரண மக்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
நாம் காலத்திற்கேற்ப சரியான தீர்மானங்களை எடுத்தோம். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தோம். பின்னர் நாட்டின் அபிவிருத்தியை ஆரம்பித்தோம். மற்றவர்கள் கலந்துரையாடலோடு மட்டும் நிறுத்திக்கொண்டதை நாம் செயற்படுத்த நடவடிக்கை எடுத்தோம். மேல் கொத்மலை, நுரைச்சோலை போன்ற மின் உற்பத்தித் திட்டங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. தொழிற் சங்கங்கள் எதிர்த்தன. நாம் அதனை நிர்மாணிப்பதென்று தீர்மானித்தோம். தற்போது ஆசியாவில் வேறு எங்குமில்லாதவாறு 24 மணித்தியாலமும் எமக்கு மின்சாரம் பெற முடிகிறது. நாட்டில் 96.05 வீத மக்கள் மின்சாரத்தை அனுபவிக்கின்றனர்.
நாம் ஆட்சியைப் பிடிக்கவும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் மட்டும் தீர்மானங்களை எடுக்கவில்லை. நாட்டின் கடற்பரப்பில் மூன்றில் 02 பகுதியை பயங்கரவாதிகள் தம்வசம்படுத்தியிருந்தபோதும் நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும்போதும் நாம் சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளோம். நாம் எமது வளங்களை விற்கவில்லை. மாறாக கட்டியெழுப்பினோம். அதன் பிரதி பலன்களை இப்போது பெறமுடிகிறது. அரசாங்கத்தின் நிலையான கொள்கைகளினால் தனியார் துறையும் முன்னேற்றமடைந்து வருகிறது. இதனால்தான் தனியார் துறையினரும் எமது பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.
இந்தியா, மாலைதீவு, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் எம்மவர்கள் தற்போது முதலீடுகளை மேற்கொள்கின்றனர். தொழிற்சாலைகளை அமைத்துள்ளனர். ஸ்ரீலங்கா எயர் லைன் விற்கப்பட்டது. நாம் மீளப்பெற்று அதனை கட்டியெழுப்பியுள்ளோம். ஜனநாயகம், வெளிப்படை என பேசுபவர்களுக்கு நான் கூற விரும்புவது நாமும் அதற்கிணங்கவே செயற்படுகின்றோம். அவர்களின் ஆட்சியில் போலன்றி பாரிய அளவில் அவை தற்போது நடைமுறையில் உள்ளன.
நாம் எதனையும் மறைக்கவில்லை. நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை எமது நிலையான கொள்கைகளின் பிரதிபலனே. வெளிநாடுகளில் ஆலோசனை பெற்று இங்கு செயல்படுபவர்களைப் போலன்றி நாம் ஒருபோதும் செயல்படுவதில்லை. வெளிநாடுகளின் ஆலோசனைகள் அவசியமில்லை. எதிர்க்கட்சித் தலைவர் தற்போது நேரடியாக எமக்குச் சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். நாம் தனிப்பட்ட ரீதியில் இழிவுபடுத்தி சேறு பூசும் அரசியலை நடத்துவதில்லை.
நாட்டில் வறுமையை ஒழித்து அனைத்து மக்களும் அழுத்தங்களில்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு மேற்கொள்ளப்படும் அரசின் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்குவதே எதிர்க் கட்சியின் செயலாக வேண்டும். சுற்று நிருபங்கள் மூலம் மக்களை அசெளகரியத்துக்கு உட்படுத்தும் செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும். அது எமது கொள்கையல்ல என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply