சிரியாவில் மனித வெடிகுண்டாக மாறிய அமெரிக்க வாலிபர்

சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சி படை வசம் சில நகரங்கள் உள்ளன. அவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ராணுவம் ஈடுபட்டுள்ளது. கிளர்ச்சிப் படைகளுக்கு ஆதரவான போரில் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய வாலிபர்களும் பங்கேற்று வருவதாக அந்த நாடுகள் கவலை கொண்டுள்ளன. இங்கு தீவிரவாத பயிற்சி பெற்றப் பின்னர், அவர்கள் தங்களது நாட்டுக்குள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சமும் சில நாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில், சிரியாவில் அதிபர் படைகளுக்கு எதிராக போராடிவரும் அல் கொய்தா ஆதரவு பெற்ற தீவிரவாத இயக்கமான நுஸ்ரத் என்னும் அமைப்பினர் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டனர். தாடியுடன் அமர்ந்திருந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க அமெரிக்க வாலிபரை சுட்டிக்காட்டிய அந்த வீடியோ பதிவு, சமீபத்தில் இட்லிப் நகரில் ராணுவ வாகன அணிவகுப்பின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட போராளி இவர்தான் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த வீடியோ சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வீடியோவில் காணப்படும் வாலிபர், அமெரிக்காவின் ஃப்ளோரிடா பகுதியை சேர்ந்தவன் என்றும் அவனது பெயர் அபு ஹுரைரா அல் அம்ரிக்கி எனவும் அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.

இந்நிலையில், நுஸ்ரத அமைப்பினர் வெளியிட்ட வீடியோவில் காணப்பட்ட நபர் அமெரிக்க குடிமகன் தான் என அமெரிக்க அரசும் தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது. அபு ஹுரைரா அமெரிக்காவை சேர்ந்தவன்தான், என்று மட்டும் சான்றுரைத்துள்ள அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் ஜென் ப்ஸாக்கி மேற்கொண்டு தகவல்கள்
எதையும் தெரிவிக்க மறுத்து விட்டார்.

இதற்கிடையே, நுஸ்ரத் தீவிரவாத இயக்கத்தில் அபு ஹுரைராவுடான் சேர்ந்து செயல்பட்ட ஒருவன், ’அவர் வீராவேசம் நிறைந்த தைரியமான இளைஞர். போர்க்களங்களில் தைரியமாக முன் வரிசையில் நின்று போரிட்டவர்.

மனித வெடிகுண்டாக மாறும் வாய்ப்பினை சந்தோஷமாக ஏற்றுக் கொண்ட அபு ஹுரைரா, இதன் மூலம் கடவுளை சந்திக்க முடியும் என்று நம்பினார்’ என்று தனது ‘டுவிட்டர்’ மூலம் தெரிவித்துள்ளான்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply