பொருத்தமான அரசியல் தீர்வுக்கு செல்வதன் மூலமே சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபட முடியும் : திஸ்ஸ விதாரண
சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப்பகிர்வில் அமைந்த அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு சென்றால் மட்டுமே சர்வதேச அழுத்தங்களிலிருந்து இலங்கையினால் விடுபட முடியும் என்று அமைச்சரும் முன்னாள் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். அவ்வாறான அதிகாரப் பகிர்வில் அமைந்த பொருத்தமான அரசியல் தீர்வுக்கு செல் லும் பட்சத்தில் சர்வதேச அழுத்தங்களிலிருந்து இந்தியாவே எம்மை விடுவிக்கும். சர்வதேச மேடையில் இந்தியா எமது பக்கத்திலேயே இருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொள்கை அடிப்படையில் அதற்கு இடமளிக்கவே முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 26 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளமை மற்றும் விசாரணை குழு அறிவிப்பு இடம்பெறவுள்ளமை தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றுக்கு செல்வதன் மூலமே சர்வதேச அழுத்தங்களிலிருந்து இலங்கை விடுபட முடியும்.
குறிப்பாக சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வில் அமைந்த தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு நாங்கள் செல்லவேண்டியது அவசியமாகும். தீர்வு விடயத்தில் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்வதா? என்று ஆராய்ந்துகொண்டிருப்பதைவிட பொருத்தமான அரசியல் தீர்வை நோக்கிப் பயணிக்கவேண்டியது அவசியமாகும்.
அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் அதிகாரப் பகிர்வில் அமைந்த அரசியல் தீர்வை அடைவதன் மூலம் இந்தியாவின் ஆதரவை நாம் பெற்றுக்கொள்ள முடியும். அதன்போது சர்வதேச அழுத்தங்கள் வந்தால் இந்தியா இலங்கையின் பக்கம் இருக்கும்.
எனவே பொருத்தமான அரசியல் தீர்வை நோக்கிப் பயணிப்பதற்கான அடித்தளத்தை நாம் இடவேண்டியது அவசியமாகும். இதேவேளை இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொள்கை அடிப்படையில் அதற்கு இடமளிக்கவே முடியாது.
இலங்கை மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அவை குறித்த விபரங்களை அனுப்பினால் இலங்கை விசாரித்துவிட்டு பதில் அனுப்பும். மாறாக இங்கு வந்து விசாரணை செய்ய இடமளிக்க முடியாது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply