எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: ராணுவ தளபதியுடன் மோடி அவசர ஆலோசனை

சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவது என்பது பாகிஸ்தானுக்கு கை வந்த கலையாகவே இருக்கிறது. ‘ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, மறுபக்கம் தாக்குதல்’ என்று பாகிஸ்தான் செயல்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகில் அமைந்துள்ள தார்குந்தி வனப்பகுதியில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த இரட்டை குண்டுவெடிப்புகளை நடத்தினார்கள். இதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். ராணுவ அதிகாரி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்குள் நேற்று காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகில் பூஞ்ச் மாவட்டத்தில் மென்தார்-பிம்பர்காலி-கேரி பகுதியில் அமைந்துள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்று காலை 7.30 மணிக்கு அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் துருப்புகள் 81 எம்.எம். பீரங்கி குண்டுகளையும், தானியங்கி ஆயுதங்களையும், சிறிய ரக ஆயுதங்களையும் பயன்படுத்தினர்.

எல்லையை காத்துக்கொண்டிருந்த பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் துருப்புகளை அவர்கள் பயன்படுத்தியதைப் போன்ற ஆயுதங்களைக் கொண்டே தாக்கி, சரியான பதிலடி கொடுத்தனர்.

அரை மணி நேரம் நீடித்த இந்த சண்டையினால் உயிரிழப்போ, வீரர்களுக்கு காயமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இந்த தாக்குதல் குறித்து ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர், “மாநிலத்தின் பாதுகாப்பு நிலவரத்தை ராணுவ மந்திரி பார்வையிடுவதற்காக இன்று ஜம்மு-காஷ்மீருக்கு வருகிற நிலையில் நடந்துள்ள இந்த சம்பவம், தற்செயலாகத்தான் நடந்ததா? ரஜவுரி, பூஞ்ச் பகுதிகளில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் குண்டுகள் வந்து விழுந்துள்ள நிலையில், சண்டை நிறுத்த மீறல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்துள்ளன. கால்நடைகள் இதில் பலியாகி உள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு நிலவரங்களை நேரில் ஆய்வு செய்வதற்காக ராணுவ மந்திரி அருண் ஜெட்லி இன்று காஷ்மீர் செல்கிற நிலையில், இந்த தாக்குதல் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஏப்ரலில் தொடங்கி மே மாதம் மத்தி வரையில், எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் 19 முறை சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளதும், இதே போன்று 2013-ம் ஆண்டு, 149 முறையும் சண்டை நிறுத்த மீறல்கள் நடைபெற்று 12 வீரர்கள் கொல்லப்பட்டதும் நினைவுகூரத்தகுந்தது.

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ தளபதி விக்ரம் சிங்குடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். பிரதமர் பதவி ஏற்றபின்னர் நரேந்திர மோடியை முதல் முதலாக சந்தித்த ராணுவ தளபதி விக்ரம் சிங், அவரிடம் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம், உள்நாட்டு பாதுகாப்பு, ராணுவத்தின் தயார் நிலை, இந்தியா எதிர்கொண்டு வருகிற சவால் கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விளக்கினார்.

இருவரும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.40 மணிவரை தொடர்ந்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையின்போது, ராணுவ மந்திரி அருண் ஜெட்லி, ராணுவ ராஜாங்க மந்திரி இந்தர்ஜித் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவல், பதவி ஏற்கவுள்ள ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த ஆலோசனை குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் நிருபர்களிடம் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியிடம் ராணுவ தளபதி விரிவான ஆலோசனை நடத்தினார். உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்பு நிலவரம் குறித்து விரிவாக அலசப்பட்டது. (போர் வந்தால் எதிர்கொள்ளும்) செயல்பாட்டு தயார் நிலை பற்றியும் விவாதிக்கப்பட்டது. கவனத்தில் கொள்ள வேண்டிய எதிர்கால சவால்கள் பற்றியும் பேசப்பட்டது” என கூறினார்.

இதற்கிடையே பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 400 தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதற்கும், நாட்டின் முக்கிய அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தவும் தயார் நிலையில் இருப்பதாக உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக உளவுத்துறை வட்டாரங்கள், “எல்லையில் ஊடுருவுவதற்கு ஏற்ற பருவ காலம் இது. அவர்கள் ஊடுருவுவதற்கு உதவும் வகையில்தான் பாகிஸ்தான் துருப்புகள் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபடுகின்றன” என கூறின.

பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் அமைதிப் பேச்சு நடத்துவதை திசை திருப்பும் வகையில் பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.யும், அந்த நாட்டு ராணுவமும் செயல்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply