பாராளுமன்றத்தின் அனுமதி பெற்றா யுத்தம் செய்தீர்கள் :இரா. சம்பந்தன்
ஐ.நா.விசாரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவது காலம் கடந்த விடயமாகும். பாராளுமன்றத்தின் அனுமதி பெற்று நீங்கள் யுத்தத்தை நடத்தவில்லை. இதேபோல் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 3 தடவைகள் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பிலும் பாராளுமன்றத்தில் ஆலோசனை நடத்தவில்லை. இந்தநிலையில் தற்போது பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவது பயனற்ற விடயமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு இலங்கைக்கு எதிரான விசாரணையினை மேற்கொள்ளக் கூடாது எனக் கோரி பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான விவாதம் குறித்து ஆராய்வதற்காக நேற்று சபாநாயகர் சமல் ராஜபக் ஷ தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு கூறியுள்ளார். சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணர்தன, அமைச்சர்களான பஷில் ராஜபக் ஷ, டியூ குணசேகர,வாசுதேவ நாணயக்கார, ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசநாயக்க, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் .அமரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக்கூட்டத்தில் ஆளும்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அசல ஜாகொடகே, மாலினி பொன்சேகா, ஜானக பண்டார, உதித் லொக்குபண்டார, ஏ.எச்.எம். அஸ்வர், சாந்த பண்டார, ஜே.ஆர்.பி. சூரியப்பெரும, நிமல் விஜயசிங்க ஆகிய 9 எம்.பி.க்களினால் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைக்குழு இலங்கைக்கு எதிரான விசாரணை மேற்கொள்ளக்கூடாது என்று கோரி சமர்ப்பித்திருந்த பிரேரணை குறித்து ஆராயப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இந்தப் பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கின்றது. இதற்கு நாம் ஆதரவு வழங்க மாட்டோம். இவ்வாறான ஒரு பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதானது காலம் கடந்த விடயமாகும்.
பாராளுமன்றத்தைக் கேட்டு அரசாங்கம் யுத்தம் நடத்தவில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக 3 தடவைகள் பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. இதன்போதுகூட பாராளுமன்றத்தில் இவ்விடயம் குறித்து ஆலோசிக்கப்படவில்லை. சர்வதேச விசாரணை தொடர்பான பிரேரணை ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட உடனேயே இந்த விசாரணைக்குழுவை ஏற்றுக்கொள்ளப்பவோதில்லை என்றும் அதற்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்றும் இலங்கைப் பிரதிநிதி தெட்டத் தெளிவாக கூறிவிட்டார். இந்தநிலையில் இந்த விசாரணை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை.
அரசாங்கம் இந்த விடயத்தில் எப்போதோ தீர்மானம் நிறைவேற்றிவிட்டது. இந்தநிலையில் பாராளுமன்றத்தில் விவாதிப்பது அர்த்தமற்ற செயற்பாடாகும். இந்த பிரேரணைக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.இதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க முடியாது. தற்போது பாராளுமன்றத்தில் இந்தப் பிரேரணை விவாதிக்கப்படுவதனால் நாட்டில் சர்ச்சையே ஏற்படும். இதனைவிட வேறொன்றும் இடம்பெறப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஏனைய கட்சித் தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்தப் பிரேரணை குறித்து 17ஆம் 18ஆம் திகதிகளில் விவாதம் நடத்துவது என்றும் தேவையேற்படின் வாக்கெடுப்பை நடத்துவது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு தினங்களும் பிற்பகல் 2.30 மணி முதல் 6.30 மணி வரை விவாதம் நடைபெறவுள்ளது.
இந்தப் பிரேரணையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கைக்கு எதிராக நடத்தப்படவுள்ள விசாரணை இலங்கையின் நல்லிணக்க செயற்பாட்டுக்கும் சமாதானத்துக்கும் பாதகமானதாக உள்ளதாலும் இலங்கையின் இறைமைக்கும் கண்ணியத்துக்கும் மேன்மைக்கும் சவாலாக உள்ளதாலும் குறிப்பிட்ட விசாரணை மேற்கொள்ளப்படக்கூடாது என்று இந்தப் பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திகதி குறிப்பிடாது பிரேரணை முன்வைக்பட்டபோதிலும் நேற்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தப் பிரேரணைக்கான விவாதம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply