அமைதியான நாடுகளில் குழப்பத்தைத் தோற்றுவிக்கும் தேவையில்லாத தலையீடுகள் உடன் நிறுத்த உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் : ஜனாதிபதி
முன்னொருபோதும் இல்லாதளவு வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகள் அதிகரித்திருப்பதாலேயே பல நாடுகளில் குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நியாயமற்ற வெளி சக்திகளின் தலையீடு உள்ளிட்ட தடைகளிலிருந்து மீள்வதற்கு உலகநாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜீ77 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பொலீவியா சென்றிருக்கும் ஜனாதிபதி, நமீபிய பிரதமர் ஹகே ஜின்கோப்பை சந்தித்துக் கலந்துரையாடியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.
இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு பொலீவியாவின் லோஸ் டஜிபோஸ் ஹோட்டலில் நடைபெற்றது. நமீபிய ஜனாதிபதியின் வாழ்த்துக்களை நமீபிய பிரதமர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துக்கொண்டார். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு செயற்பாடுகள், அபிவிருத்தியடைந்துவரும் உட்கட்டுமான வசதிகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நமீபிய பிரதமருக்கு விளக்கிக் கூறியிருந்தார்.
வடமாகாணசபைத் தேர்தலை நடத்த முடிந்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய காணாமல் போனவர்கள் குறித்த விசாரணைகளை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தனது விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் கூறினார். “மக்கள் அமைதியாகவே வாழ்ந்து வருகின்றனர். எனினும் அரசியல் வாதிகளும், நாட்டுக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளுமே மகிழ்ச்சி யாகவில்லை” என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நமீபிய பிரதமரிடம் சுட்டிக்காட்டினார்.
தமது நாட்டிலும் இவ்வாறான நிலை காணப்படுவதாக இச்சந்திப்பில் தெரிவித்த நமீபிய பிரதமர், நமீபியாவுக்கு இலங்கை வழங்கியிருக்கும் உதவிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். இரு நாட்டுத் தலைவர்களுக்கு மிடையிலான சந்திப்பில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷேநுகா செனவிரட்ன, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன, கியூபாவுக்கான இலங்கைத் தூதுவர் சரத் திசாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply