கொலம்பியா அதிபர் தேர்தலில் ஜுவன் மேனுவேல் சாண்டோஸ் மீண்டும் வெற்றி
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் பார்க் எனப்படும் ஆயுதமேந்திய புரட்சிகர போராளிகள் குழு பலம் வாய்ந்ததாக விளங்குகின்றது. இந்த குழுவுடன் சமாதானம் செய்துக் கொள்ள விரும்பி கடந்த 2012ஆம் ஆண்டு அரசு தொடங்கிய பேச்சுவார்த்தைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், அந்நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. வாக்குரிமை பெற்றவர்களில் 94.7 சதவீதம் பேர் இந்த தேர்தலில் வாக்களித்திருந்தனர். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் இருந்தே முன்னிலை வகித்த தற்போதைய அதிபர் ஜுவன் மேனுவேல் சாண்டோஸ், 50.7 சதவீதம் வாக்குகளை பெற்று மீண்டும் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆஸ்கார் இவான் சுலுவாகா 45.2 சதவீதம் வாக்குகளுடன் தோல்வியை தழுவினார். போராளிகளுடன் சாண்டோஸ் கடைபிடித்து வரும் சமாதானப் போக்கை கடுமையாக விமர்சித்து வரும் சுலுவாகா, அவர்களின் நிபந்தனைகளுக்கு அரசு கட்டுப்பட கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்.
இந்த தேர்தலில் சுலுவாகா வெற்றி பெற்றால் போராளி குழுக்கள் நசுக்கி ஒடுக்கப்படும் என பெரும்பான்மையான மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் அவர்களின் நம்பிக்கையை தகர்த்து விட்டதாக கருதப்படுகிறது.
அந்நாட்டின் போராளிகள் குழுவினருக்கும் அரசுக்கும் இடையில் நிகழ்ந்து வரும் நீண்ட கால மோதல்களின் விளைவாக சுமார் 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் வசிப்பிடங்களை விட்டு குடிபெயர்ந்து அகதிகளாக வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply