முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை தடுத்து நிறுத்தவும் இலங்கைக்கு அமெரிக்கா அறிவுரை

இலங்கையின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள பெருவாலா நகரத்தில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்து தொடர்பான தகராறில் ஒரு புத்த துறவி தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, அலுத்காமா, பெருவாலா மற்றும் தலைநகர் கொழும்புவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தர்கா டவுன் ஆகிய பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இந்த மோதல் கலவரமாக உருவெடுத்ததில், நேற்று முன்தினம் இரவு முஸ்லிம்களை குறி வைத்து புத்த மதத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இப்பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள் எரித்து, சூறையாடப்பட்டன.

இதனையடுத்து, அலுத்காமா, பெருவாலா மற்றும் தர்கா டவுன் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்தி, கலவரத்தை கட்டுப்படுத்துமாறு இலங்கை அரசை அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, கொழும்புவில் உள்ள அமெரிக்க உயர் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘கலவர பகுதிகளில் ஒழுங்கை பாதுகாத்து, அனைத்து தரப்பு குடிமக்களின் உயிர், வழிபாட்டு தலங்கள் மற்றும் உடைமைகள் பாதுகாக்கப்படுவதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த தாக்குதல்கள் தொடர்பாக விசாரித்து, கலவரத்துக்கு காரணமானவர்கள் நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வன்முறையில் இருந்து விலகி இருந்து, அமைதி காத்து, சட்டத்தை மதித்து நடந்து கொள்ளும்படி அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறோம் எனவும் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply