அப்பாவி முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைதுசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்பாவி முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஐ.நா விசாரணைக்கு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இனவாதக் குழுக்கள் மக்களை தூண்டிவிடும் வகையில் ஆற்றிய உரைகளினால் அளுத்கமவிலும் பேருவளையிலும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டன.
இவை தொடர்பில் போதுமான ஆதாரங்கள் இருந்தபோதும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவை தொடர்பில் நடவடிக்கை எடுக்க யாப்பில் சட்ட அனுமதி காணப்படுகிறது. மக்களின் பாதுகாப்புத் தொடர்பில் தெளிவான உத்தரவாதமொன்று வழங்கப்பட வேண்டும். தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். இவற்றுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யவும், எதிர்காலத்தில் மக்களைத் துண்டிவிடுவோர் தொடர்பில் செயற்படவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைவருக்கும் எதிராக சட்டம் சமமாக செயற்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம்களுக்கு வெளிநாட்டிலிருந்து ஆயுதம் வருவதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். புலிகளை அழித்தொழித்த புலனாய்வுப் பிரிவினருக்கு ஏன் இது தொடர்பில் செயற்பட முடியாது. இலங்கைக்கு எதிராக ஐ.நா விசாரணைகளை நடத்த முற்படுகையில் இவ்வாறான சம்பவங்கள் அவற்றுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply