அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பிடம் ரஷியா புகார்
அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பிடம் ரஷியா புகார் செய்துள்ளது. உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரிமியாவில் பொதுவாக்கெடுப்பு நடத்தி அந்த பகுதியை ரஷியா தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டது. மேலும் உக்ரைன் நாட்டின் சில நகரங்களையும் இதுபோல் ரஷியாவுடன் இணைக்கவேண்டும் என்று உக்ரைன் ராணுவத்துடன் சண்டையிட்டு வரும் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கூறி வருகிறார்கள். ரஷியாவின் இந்த நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக அந்நாட்டுக்கு பொருளாதார தடையை அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் விதித்துள்ளன.அமெரிக்கா இன்னும் ஒரு படி மேலே சென்று ரஷியாவின் பல்வேறு பெரிய நிறுவனங்களையும், வங்கிகளையும் முடக்கும் வகையில் தடைகளை விதித்துள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அவரது நெருங்கிய சகாக்கள் ஆகியோருக்கும் இந்த வங்கிகளுக்கும் தொடர்பு இருப்பதால் அவை முடக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.
ரஷியா புகார்
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து உலக வர்த்தக அமைப்பிடம் ரஷியா புகார் செய்து உள்ளது.
இதுபற்றி ரஷிய பிரதமர் மெத்வதேவ் செயின்ட் பீட்டர்ஸ் நகரின் சட்ட மாநாடு ஒன்றில் பேசும்போது கூறியதாவது:-
ரஷியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை நமது வர்த்தக தொடர்புகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இது பற்றி உலக வர்த்தக அமைப்பிடம் புகார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக நாங்கள் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை உலக வர்த்தக அமைப்புக்கு நாங்கள் அனுப்பி இருக்கிறோம்.
அமெரிக்கா விதித்து இருக்கும் தடை உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறுவதாக அமைந்து இருக்கிறது. குறிப்பாக உலக வர்த்தக அமைப்பின் கீழ் உள்ள இருநாடுகள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இது அவமதிப்பதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தீவிரப்படுத்துவோம்
இதனிடையே, உக்ரைன் நாட்டில் நிலவி வரும் பதற்றத்தை ரஷியா தணிக்கத் தவறினால் பொருளாதார தடைகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டி இருக்கும் என்று பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் ரஷியாவை எச்சரித்துள்ளன.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா தனிப்பட்ட முறையில் பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே மற்றும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இருநாடுகளும் இவ்வாறு அறிவித்து இருக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply