நாட்டில் மீண்டும் அமைதிநிலை குழம்பி விடக்கூடாது என்பதே சகல சமூகங்களினதும் விருப்பம் : அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சம்பவங்களைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடுவதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன. எனினும் நாட்டில் குழப்பநிலை ஏற்படாது அமைதியைப் பேணுவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். அண்மைய சம்பவங்கள் தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அமைச்சர் நேற்று விளக்கமளித்திருந்தார். கொழும்பிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கில் அமைச்சில் நடைபெற்ற இந்தச் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். ஒருசில தரப்புக்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் நாட்டில் மதங்களுக்கிடை யிலான ஒற்றுமையைக் குழப்பும் வகையில் அமைந்துள்ளன.

இவ்வாறான நிலையில் அரசியல் கட்சிகள் வேறுபாடுகளை மறந்து இன மற்றும் மத ஒற்றுமையை ஏற்படுத்த செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொலீவியாவில் இருந்தபோது சம்பவம் தொடர்பாகக் கேள்விப்பட்டவுடன் சமயத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் உடனடியாகத் தொடர்புகொண்டு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று விளக்கியிருந்தார். அதேநேரம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பெளத்த மதகுருமாரும் முஸ்லிம் மதகுருமாரும் உடனடியாக செயற்பட்டிருந்தனர். அதேநேரம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரிகள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அளுத்கம, பேருவளை, வெலிப்பன்னை மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளில் பொலிஸாரின் உதவிக்காக விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். அண்மைய சம்பவம் தொடர்பில் இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் 47 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அமைதியைக் குழப்பும் வகையில் நடந்துகொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மதக்குழுவி னரிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் சிறிய குழுவின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கே அரசாங்கம் முன்னுரிமை கொடுத்துள்ளது.

சிங்கள, முஸ்லிம் மக்கள் நீண்டகாலமாக ஒரே கிராமங்களில் நட்புறவுடன் வாழும் கலாசாரமொன்றே காணப்படுகிறது. இதனால் எந்தவொரு வன்முறையும் உருவாக்கப்படக்கூடாது என்பதே சகல சமூகத்தினதும் விருப்பமாக உள்ளது. இனரீதியான முரண்பாடுகள் காரணமாக கடந்த முப்பது வருடங்களில் நாடு நல்ல விலையைக் கொடுத்துள்ளது என்பதால் மீண்டும் அமைதிநிலை குழம்பிவிடக்கூடாது என்பதையே சகல சமூக மக்களும் விரும்புகின்றனர்.

அண்மைய சம்பவங்களைப் பயன்படுத்தி இரண்டு விதமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒன்று முஸ்லிம் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இடைவெளியொன்றை உருவாக்கும் முயற்சி. மற்றையது அரசாங்கத்துக்கு உதவும் முஸ்லிம் நாடுகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்துவது. இதன்மூலம் வெளிநாடுகளி லிருந்து கிடைக்கும் உதவிகளைக் குறைக்கும் முயற்சியாகும்.

நாட்டின் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு ஒற்றுமையைக் குலைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தடுக்கப்படும். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகளைத் தடுக்கும் வகையிலான சட்டங்கள் எமது அரசியலமைப்பில் உள்ளன. சட்டத்துக்கு முரணான வகையில் இடம்பெறும் எந்தவொரு பேரணிகளுக்கோ அல்லது ஆர்ப்பாட்டங்களுக்கோ இடமளிக்க வேண்டாமென பொலிஸாருக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply