மதம் மாறி திருமணம்: தூக்கு விதிக்கப்பட்ட சூடான் பெண் விடுதலையானார்
ஆப்பிரிக்க நாடான சூடானை சேர்ந்தவர் மெரியம் அட்ராப் அல் ஹாடி முகமது அப்துல்லா. இவரது தாய் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். தந்தை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் சிறு வயதில் இருந்தே இவர் தனது தாயின் பராமரிப்பில் வளர்ந்தார். எனவே கிறிஸ்தவராக வளர்ந்த இவர் தனது பெயரை மெரியம் யெக்யா இப்ராகிம் இசாக் என மாற்றிக் கொண்டார். இந்த நிலையில் அவர் கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்கு தாயாகியும் விட்டார். இதற்கிடையே, இவர் மதம் மாறி திருமணம் செய்ததாக கூறி அவர் மீது கார்டோம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
சூடான் ஒரு முஸ்லிம் நாடு. இங்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் வேறு மதத்தினரை திருமணம் செய்ய அனுமதி இல்லை. இதற்கிடையே இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மதம் மாறி திருமணம் செய்த மரியத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில், சிறை ஆஸ்பத்திரியில் மெரியம்முக்கு இரண்டாவதாக அழகான பெண் குழந்தை பிறந்தது. மதரீதியான தண்டனை என்ற வாதத்தை கைவிட்டு, மனிதநேய அடிப்படையில் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும், மனித உரிமை ஆர்வலர்களும் சூடான் அரசை வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், தூக்கு தண்டனையை எதிர்நோக்கி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மெரியம்முக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அவரது வக்கீல்கள் மேல் முறையீடு செய்தனர். இந்த முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
மெரியத்துக்கு மரண தண்டனை விதித்து வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்பை ரத்து செய்த நீதிபதி, அவரை உடனடியாக விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் சிறையில் இருந்து விடுதலையாகி விட்டதாகவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பான ஒரு ரகசிய இடத்தில் அவரை தங்க வைத்துள்ளதாகவும் அவரது வக்கீல் மொஹனெட் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply