புதுமாத்தளன் பகுதியிலிருந்து தப்பி வந்த பொதுமக்களை இலக்கு வைத்து புலிகள் தாக்குதல்; மூன்று பேர் பலி

முல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்திலுள்ள புதுமாத்தளன் பகுதியிலிருந்து ஆறு படகுகள் மூலம் தப்பி வந்த பொதுமக்களை இலக்கு வைத்து புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் படு காயமடைந்துள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். ஆறு படகுகள் மூலம் தப்பிவந்த பொதுமக்கள் மீது பின் தொடர்ந்து சென்றே தாக்குதல்களை புலிகள் நடத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து ஆறு படகுகளில் சென்ற போது மக்கள் மிகவும் அச்சத்துடன் தட்டுத்தடுமாறியுள்ளனர்.

ஆறு படகுகளில் இரண்டு படகுகள் கெவில் மற்றும் சுண்டிக்குளம் கரையை சென்றடைந்துள்ளது. இவர்களை படையினர் பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளனர்.

ஏனைய, நான்கு படகுகளும் கடற்படையினரின் உதவியுடன் முனை பிரதேசத்துக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதென்றார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி நேற்று 200 பொதுமக்கள் தப்பிவந்துள்ளனர். இவர்களை இலக்கு வைத்து புலிகள் எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலிருந்து ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள படையினரை இலக்கு வைத்து புலிகள் 130 மி. மீ. ரக மற்றும் 120 மி.மீ. ரக பீரங்கிகளை பயன்படுத்தி நேற்றும், நேற்று முன்தினமும் தாக்குதல் நடத்தினர்.

புலிகள் எந்தப் பகுதியிலிருந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்பது படையினரின் ராடார் கருவிகளில் தெளிவாக பதிந்துள்ள போதிலும் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக படையினர் பதில் தாக்குதல்கள் எதனையும் நடத்தவில்லை என்று பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply