நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி மொத்த அனுமதி: முதல்வர் உத்தரவு
தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள எனது தலைமையிலான தமிழக அரசு, அவர்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க எனது முந்தைய ஆட்சி காலத்தில், அதாவது 9.11.2001 அன்று ஆணையிட்டிருந்தேன். அதன்படி, பள்ளிவாசல்களுக்கு அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமிய பெருமக்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.சென்ற ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசியை வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இஸ்லாமிய மக்களின் கோரிக்கையினை ஏற்று, இந்த ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக மொத்த அனுமதி வழங்க ஆணையிட்டுள்ளேன்.
ஆவணங்களை உரிய ஆய்வு செய்து பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 4500 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம், மாநிலம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயன் அடையும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply