புலனாய்வுத்துறையினர் கடமைகளுக்கு அப்பால் எப்போதும் செயற்பட்டதில்லை

நாட்டின் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சகல சந்தர்ப்பங்களிலும் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு செயற்பட்டுள்ளனரே தவிர எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அரசியல் நோக்கத்திற்காக செயற்படவில்லை என்று இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். புலனாய்வுத்துறை அதிகாரிகள் தமது கடமைகளுக்கு அப்பால் செயற்பட வில்லை. அவ்வாறு கூறப்படும் கூற்றுக்களை முற்றாக மறுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்படும் வகையில் தேசிய புலனா¡ய்வுத் துறையையோ அல்லது அதன் அதிகாரிகளையோ காட்டிக்கொடுப்பதை எக்காரணத்தைக் கொண்டும் பாதுகாப்புத் தரப்பினர் என்ற வகையில் எம்மால் அனுமதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பாதுகாப்பு மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் அதன் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தலைமையில் இடம்பெற்றது.

இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர, கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய ஆகியோர் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில்:-

புலனாய்வுத் துறை தொடர்பில் பொதுவாக விமர்சிப்பதில் எந்த பிரச்சினைகளும் கிடையாது. மாறாக தனிப்பட்ட முறையில் ஒரு சிலரை குறிப்பிட்டு அவர்களது பெயர், விபரங்களை வெளியிடுவதானது பாரதூரமான ஒன்றாகும். இதன் மூலம் அவர்களுக்கு ஒருபுறம் உயிர் ஆபத்தும் மறுபுறம் தொடர்ந்தும் தமது கடமைகளை செய்ய முடியாத நிலையும் ஏற்படும்.

சிலர் குறுகிய அரசியல் நோக்குடன் சில விடயங்களை கூறி வருகின்றனர். இது கவலைக்குரிய விடயமாகும். அவர்கள் இதனை வேண்டும் என்றே திட்டமிட்டு செய்கின்றனரா அல்லது யாருடையதாவது தூண்டுதல்கள் காரணமாக செய்கின்றனரா என்பது எமக்கு தெரியாது. எவ்வாறாயினும் இது மிகவும் ஆப்தானதும் பாரதூரமானதுமாகும் என்றார்.

எந்த ஒரு விடயம் தொடர்பிலும் அதனை அணுகுவதற்கு ஒரு முறையுள்ளது. குற்றச்சாட்டாக இருந்தால், அவற்றை பொலிஸில் முறைப்பாடு செய்வதன் ஊடாக நடவடிக்கை எடுக்கலாம். அதேபோன்று யோசனையோ கருத்தாகவோ இருந்தால், அவற்றை கடிதம் ஒன்றின் மூலம் சம்பந்தப்பட்ட பிரிவுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் நடவடிக்கை எடுக்கலாம் மாறாக பகிரங்கமாக வெளியிடுவதன் மூலமோ, செய்தியாளர் மாநாட்டை நடத்துவதன் மூலமோ உரிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எமது நாட்டை பொறுத்தமட்டில் சிறந்த, திறமையுள்ள புலனாய்வு அதிகாரிகள் உள்ளனர். இவர்களது பங்களிப்புக்கள் காரணமாகவே 30 வருடகால யுத்தத்தை குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு கொணடுவர முடிந்தது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply