மக்கள் கொல்லப்படவில்லையென்றால் அரசு ஏன் விசாரணைக்கு மறுக்கிறது:லக்ஷ்மன் கிரியெல்ல
விடுதலை புலிகளுடனான இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றால் அரசாங்கம் ஏன் விசாரணைக்கு மறுப்பு தெரிவிக்கின்றது. சர்வதேச விசாரணைக்கு இடமளிக்காவிடின் அரசாங்கம் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இலங்கை மீதான சர்வதேச விசாரணை தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுகின்ற நிலையில் அது தொடர்பாக வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது இராணுவத்தினால் யுத்த குற்றங்கள் இடம்பெற்றதாக சர்வதேசம் குற்றம் சுமத்தியுள்ளது. அதற்கான ஆதாரங்களையும் முன்வைத்துள்ளனர். இதில் எந்தளவு உண்மைத்தன்மை உள்ளதென்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியாது. ஆனால் இதில் உண்மைத்தன்மை உள்ளதா? இல்லையா? என்பதை அரசாங்கம் நிரூபிக்க வேண்டிய தேவை உள்ளது. சர்வதேச விசாரணை இடம்பெறுவது நாட்டிற்கு பாதிப்பு என்றால் அரசாங்கம் இலங்கையின் சுயாதீன உள்ளக விசாரணையொன்றை நடத்தி தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால் யுத்தம் முடிவடைந்து இந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கத்தினால் எந்தவொரு விசாரணையும் இடம்பெறவில்லை. விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றால் அரசாங்கம் உண்மையான அறிக்கையினை வெளிப்படுத்தியிருக்க முடியும். அல்லது பயமின்றி சர்வதேச விசாரணையொன்றினை அனுமதித்திருக்க முடியும். ஆனால் அரசாங்கம் தவறிழைத்திருக்கின்றமையினாலேயே இலங்கை மீதான விசாரணைக்கு அஞ்சுகின்றது.
இலங்கையில் இன்று நிலைமைகள் மிக மோசமானதாக மாறிவிட்டது. யுத்த காலகட்டத்தில் வடக்கில் மட்டுமே அச்சுறுத்தல் அதிகரித்திருந்தது. ஆனால் இன்று நாடு பூராகவும் இனக்கலவரங்களும், போராட்டங்களும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே இனவாதத்தினை பரப்பி இனக்கலவரங்களை ஏற்படுத்துகின்றனர். மதவாத அமைப்புகள், தீவிரவாத குழுக்களிடம் அதிகாரங்களை வழங்கி அவர்களுக்கு பாதுகாப்பினையும் இந்த அரசாங்கம் வழங்குகின்றது. இந்த சர்வாதிகார ஆட்சியில் மக்களே பலிக்கடாவாகி துன்பப்படுகின்றனர். நாட்டில் ஜனநாயக ஆட்சி இடம்பெற வேண்டுமாயின் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தென்னாபிரிக்கா இன்று ஜனநாயகத்தின் முறையில் செல்வதும், அங்கு இன வேற்றுமை அழிக்கப்பட்டமையினாலேயே இலங்கையிலும் இந்த நிலைமை ஏற்பட வேண்டும். மூவின மக்களுக்குமான சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
மேலும், சர்வதேச விசாரணைக்கு இந்த அரசாங்கம் இணங்குவதால் நாட்டின் மீதான அழுத்தம் குறைக்கப்படும். அரசாங்கமே விசாரணைக்கான அனுமதியினை சர்வதேசத்திற்கு கொடுத்தது. இப்போது சர்வதேச விசாரணைக்கு இடமில்லை என அரசாங்கம் கூறுவதால் எவ்வித மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை. அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு மறுத்தால் பொருளாதார ரீதியில் மட்டுமன்றி அரசியல் ரீதியிலும் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply