பாராளுமன்ற விதிமுறையை மீறி செயல்படக்கூடாது: பிரதமர் மோடி பேச்சு

பாராளுமன்றத்துக்கும், டெல்லி மேல்-சபைக்கும் பா.ஜனதா சார்பில் 150-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். மேலும் வருகிற 7-ந்தேதி பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. இதையொட்டி, புதிய எம்.பி.க்களுக்கு பாராளுமன்ற நடைமுறைகள் குறித்த 2 நாள் பயிற்சி முகாம் டெல்லி அருகேயுள்ள சூரஜ்குந்த் நகரில் நேற்று தொடங்கியது. பாராளுமன்றத்துக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- உங்களது செயல்பாடுகள் பாராளுமன்றத்தில் எப்படி இருக்கிறது என்பதை மட்டும் மக்கள் பார்ப்பதில்லை. அதற்கு வெளியேயும் பார்க்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே பொது வாழ்வில் தூய்மையை நீங்கள் கடைபிடிக்கவேண்டும்.

எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த நாம் தற்போது, ஆளும் கட்சி வரிசைக்கு வந்திருக்கிறோம். இது குறிப்பிடத்தக்கதொரு மாற்றம். எனவே இதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் செயல்படவேண்டும். ஏனென்றால் ஆளும்கட்சி என்கிற வகையில் நமக்கு கூடுதல் பொறுப்புகள் உள்ளன.

பாராளுமன்றத்தின் விதிமுறை புத்தகம் என்பது பகவத் கீதையை போன்றது. எனவே அதை மீறி புதிய எம்.பி.க்கள் செயல்படக்கூடாது.

தவிர, கட்சி தலைமையின் அனுமதியின்றி பாராளுமன்றத்தில் எதையும் நீங்கள் செய்யக் கூடாது. பாராளுமன்றத்தில் உங்களது பேச்சு கருத்துகள் பொதிந்ததாக இருக்கவேண்டும்.

முந்தைய அரசு அனைத்தையும் காலி செய்துவிட்டு சென்ற நிலையில்தான் நான் பிரதமர் பொறுப்பை ஏற்று இருக்கிறேன். நாட்டின் பொருளாதார சூழல் அடி மட்டத்தை கடுமையாக தாக்கி இருக்கிறது.

எனவே, இந்திய பொருளாதாரத்தை ஆரோக்கியமான நிலைக்கு மீட்டெடுக்க அடுத்த இரண்டாண்டுகளுக்கு கடுமையான பொருளாதார முடிவுகளை அரசு எடுக்கவேண்டி இருக்கும். இது நாட்டை மீளச் செய்வதுடன், நாட்டின் தன்னம்பிக்கையையும் மேம்படுத்துவதாக அமையும்.

நான் எடுக்க இருக்கும் முடிவுகள் நாட்டின் மீது கொண்டிருக்கும் மிகுதியான அன்பின் காரணமாகத்தான் என்பதை நான் அறிவேன். அதை எனது நாட்டு மக்களும் உணர்ந்து கொண்டால் நிச்சயம் பொருளாதார ஆரோக்கியத்தில் நல்ல பலனை நாம் பெற்றுவிட முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த முகாமில், கலந்து கொள்வதற்காக காலை 8.30 மணிக்கே பிரதமர் மோடி வந்துவிட்டார். சுமார் 2 மணி நேரம் மோடி மேடையில் அமர்ந்து நிகழ்ச்சிகளை கவனித்தார். அவருடன் கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு ஆகியோரும் இருந்தனர்.

முகாமில் கேள்வி நேரத்தின்போது புதிய எம்.பி.க்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும், பொதுமக்கள் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக கவனத்துக்கு கொண்டு வந்து இரு சபைகளிலும் பேசுவது எப்படி என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply