வடமாகாண சபை ஆட்சியை ஆட்டம் காண வைக்க சதி :முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

தமிழரின் வடமாகாண சபை ஆட்சியை ஆட்டம் காண வைக்க சதிகள் நடந்து கொண்டிருக்கின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி கிருஷ்ணபுரம், பாரதிபுரம் போன்ற கிராம மக்களை கிருஷ்ணபுரம் விளையாட்டு மைதானத்தில் நேற்று (29) மாலை முதலமைச்சர் சந்தித்து உரையாடும் போதே அவ்வாறு தெரிவித்தார். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு காலத்தில் என் பால்ய வயதுக்காலத்தில் வடமாகாணத் தமிழ் பேசும் மக்களை அறிவில் சிறந்தோர் அலுவலக ஆற்றலில் சிறந்தோர் என்றெல்லாம் சிங்கள மக்கள் புகழ்ந்தார்கள்.

அதே காலகட்டத்தில் மலையகத் தமிழ் மக்களை சுற்றாடலுக்கேற்ப வேலை செய்யும் சுறுசுறுப்பு மிக்கவர்கள், செயல் நுட்பத்திறமை மிக்கவர்கள் என்றெல்லாம் புகழ்ந்தார்கள்.

எமது முஸ்லிம் சகோதரர்கள் வணிகத்தில் வியாபாரத்தில் கைதேர்ந்தவர்கள் என்று புகழ்ந்தார்கள். ஆனால் அரசியல் அதிகாரம் தம் கைக்கு வந்தவுடன் இராகம் மாறியது.

எல்லோருமே எங்கள் வளங்களைக் கொள்ளையிட வந்த வேற்று நாட்டவர்கள் என்ற புதிய குரல் மேலோங்க ஆரம்பித்தது. இந்தக் குரலின் உரத்த தன்மையால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே இங்கிருந்து வசித்து வந்த வடகிழக்கு மாகாணத் தமிழரின் தொன்மையும்,

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து இங்கிருந்து வந்த முஸ்லீம்களின் நீண்ட வசிப்பும், மலையகத்தில் ஆங்கிலேயரால் குடியேற்றப்பட்ட மலையகத் தமிழரின் உரிமைகளும் குறித் தொதுக்கப்பட்டு சகலரும் இந்நாட்டிற்குத் தேவையற்றவர்கள் என்ற கோஷம் எழுந்தது.

பெரும்பான்மை இனச் சமூகத்தினருக்கே நாடு சொந்தம் எனப்பட்டது. இதன் தாக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

முதலில் 1958ல் எமது வடகிழக்கு மாகாண மக்கள் பாதிக்கபப்ட்டனர். பின்னர் 1977ல் மலையக மக்கள் பாதிக்கப்பட்டனர். 1983ல் தமிழர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். தற்பொழுது முஸ்லிம் சகோதரர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இவ்விதமான பாதிப்புக்களின் மத்தியில் தான் நீங்களும் உங்கள் முன்னையவர்களும் 1977ம் ஆண்டிலும் அதற்குப் பின்னரும் மலையகத்தில் இருந்து அடிபட்டு இடிபட்டு வடமாகாணத்திற்கு வந்து வன்னியை உங்கள் சொந்த பூமி ஆக்கி கொண்டீர்கள் காடாயிருந்த நிலங்களை கழனிகள் ஆக்கினீர்கள்.

இன்று எமது தமிழரின் வடமாகாணசபை ஆட்சிக்கு வந்துள்ளது. அந்த ஆட்சியை ஆட்டம் காண வைக்கச் சதிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் உங்கள் பிரச்சனைகள் இன்னும் நீண்டு கொண்டு செல்வதைக் காண்கின்றேன். காணி சம்பந்தமான பிரச்சனைகளே உங்களுக்கு மிக முக்கியமானவை. வாழ்வாதாரம், வாழ்க்கைப் பிரச்சினைகள் என்று பலதையும் எதிர்கொண்டுள்ளீரக்ள்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட வேறொரு முக்கிய பிரச்சினையை நீங்கள் எதிர்கொண்டுள்ளீர்கள். அதுதான் பிரதேசவாதம்.

எமது அலுவலரக்ளில் சிலர் பிரதேசவாதத்தை எழுப்பி “நீங்கள் மலையகத்தமிழர். நாங்கள் உள்ளூர் தமிழர். உங்களுக்கு உரித்துக்கள் தரமாட்டோம்” என்று கூறி பக்க சார்பாக நடந்து கொள்வதாக அறிகின்றேன்.

அவ்வாறு நடந்து கொள்ளும் அலுவலர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். “நீங்கள் எவ்வாறு எமது மலையகத் தமிழர்களை அந்நியர்களாக கருதுகின்றீர்களோ அதே போல்தான் உங்களை அன்னியர்கள் என்று சிங்கள பிக்குமார் கூட்டம் கூடிக்கூறுகின்றனர்.

தயவுசெய்து அவ்வாறு கூறுவதைத் தவிர்த்து மனிதாபிமான முறையில் நடந்து கொள்ளுங்கள்”.

இன்று எமது வட கிழக்கு மாகாண மக்கள் பெருந்தொகையாக வெளிநாடு சென்றுள்ளனர். எஞ்சியிருக்கும் நாம் எமது உரித்துக்களுக்காகப் போராடி வருகின்றோம்.

இப்பேர்ப்பட்ட காலகட்டத்தில் எமக்குத் தோள் கொடுத்து எம்முடன் வாழும் மலையகத் தமிழர்களுக்கு அதிகாரப்பாகுபாடு காட்டுவது என்ன நியாயம்? “அலுவலரக்ளே! தயவு செய்து உங்கள் பிழையான நடவடிக்கைகளை நிறுத்துங்கள்! ஆணவம் இடம் கொடுக்கவில்லை என்றால் மனித உரிமைகளையாவது சிந்தித்துப் பார்த்து நிவாரணங்களை இம்மக்களுக்கு வழங்க முன்வாருங்கள். அவ்வாறு செய்யாது விட்டு உங்கள் செய்கைகள் அம்பலத்துக்கு வந்தால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்லி வைக்கின்றேன்.

தமிழ்ப் பேசும் மக்கள் யாவரும் ஒரு தாய் மக்கள் என்பதே எமது கோட்பாடு. அவர்கள் மலையக மக்களாகிலும் கிழக்கிலங்கை மக்கள் ஆகிலும் வன்னி மக்களாகிலும், எந்த மதத்தைச் சேர்ந்தவரக்ள் ஆகினும் அவர்கள் அனைவரும் எமது சுற்றத்தார்.

பாரதத்தில் முகாம்களில் முடங்கிக் கொண்டு இருப்பவர்களும் எம்மவரே. அவர்களை அழைத்து வந்து இங்கு அவர் தம் இடங்களில் குடிவைக்க வேண்டும்.

எம்மால் ஆன உதவிகளை அவர்கள் அனைவருக்குஞ் செய்து கொடுப்பது எமது தலையாய கடன். அலுவலரக்ளின் அசிரத்தையால் எமது இந்த பிரதேச மக்கள் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்வது எமது கடமை. இந்த கடமையில் இருந்து நாங்கள் தவறமாட்டோம் என்பதையும் கூறி வைக்கின்றேன்.

உங்கள் குறைகளை எழுத்து மூலம் எமக்கு தெரிவியுங்கள். விரைவில் உங்கள் ஒவ்வொருவரின் குறைகளுக்கும் முடிந்த வரையில் நிவாரணங்களைத் தேடிப் பெற்றுக் கொடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply