வெடிகுண்டு பீதி: 164 பேருடன் டெல்லி விமானம் அவசரமாக பெங்களூரில் தரையிறக்கம்

கொச்சியில் இருந்து நேற்றிரவு டெல்லிக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பெங்களூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 156 பயனிகள் மற்றும் விமானிகள் உள்பட 8 ஊழியர்களுடன் கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 8.40 மனிக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாக கொச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு டெலிபோன் மூலம் தகவல் வந்தது.இதனையடுத்து, உடனடியாக அந்த விமானத்தின் விமானியை தொடர்பு கொண்ட கொச்சி விமான நிலைய அதிகாரிகள், அருகாமையில் உள்ள விமான நிலையத்தில் உடனடியாக தரையிறங்கும்படி உத்தரவிட்டனர். அவ்வேளையில், கர்நாடகம் மாநிலத்தின் மீது பறந்துக் கொண்டிருந்த அந்த விமானம் பெங்களூரில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இரவு சுமார் 10 மணியளவில் அவசரமாக தரையிறங்கியது.

பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் குழு பின்னிரவு நேரம் வரை அந்த விமானத்தை சோதனையிட்டதில் எந்த வெடிப்பொருளும் விமானத்தினுள் இல்லை என்பது தெரியவந்தது.

இதனிடையே, கொச்சியில் இருந்து அந்த விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்ற ஒரு பெண், தனது நண்பரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, விமான நிலையத்தில் சோதனை கெடுபிடிகள் அதிகமாக உள்ளது. ஒருவேளை, வெடி குண்டு பீதி ஏதும் இருக்குமோ என பயமாக உள்ளது என்று கூறி போனை அணைத்து விட்டார்.

இதனால், பதற்றம் அடைந்த அந்த நண்பர், தனது தோழியின் உயிருக்கு ஆபத்து ஏதும் நேர்ந்து விடக்கூடாதே.. என்ற எண்ணத்தில் கொச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அதே தகவலை தெரிவிக்க அந்த டெல்லி விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply