கச்சத்தீவு பற்றிய இந்திய நிலைப்பாட்டுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு

கச்சத்தீவு யாருக்கு சொந்தம் என்பது தொடர்பில் இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று செவ்வாய்க்கிழமை இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், கச்சதீவு பகுதிகளில் மீன்பிடி உரிமை கோரும் வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும், அதில் முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் தாக்கல் செய்ததை போன்ற பதில் மனுவை, தற்போதைய பாஜக அரசாங்கமும் மீண்டும் தனது பிரமாணப்பத்திரத்தில் வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.அதே சமயம் இந்தியாவுக்குச் சொந்தமான கச்சதீவை இலங்கை நாட்டுக்கு, இந்தியா அளித்த விவகாரத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். அரசியல் சட்டத்தில் உரிய மாற்றம் செய்யப்படாமல் சட்டத்திட்டங்களை மீறி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு எதிராக தாம் கடந்த 2008ம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்த கச்சத்தீவு விவகாரத்தில் கடந்த 1974ம் ஆண்டில் பாரதீய ஜனசங்கம் தலைவராக இருந்த போது, காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் அப்போது வழக்கு தொடரப்போவதாக குறிப்பிட்டதையும் அக்கடிதத்தில் எடுத்துக்காட்டியுள்ளார்.

மத்திய அரசு தரப்பில் தொடர்ந்து கச்சத்தீவு பிரச்சனை ஒரு முடிந்து போன விவகாரம் என்று குறிப்பிடுவதை ஒருபோதும் தமிழக அரசு ஏற்காது என்று கூறியுள்ள ஜெயலலிதா, கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி அன்று, தான் இது தொடர்பாக ஒரு அறிக்கையை முன்பே மோடியிடம் சமர்ப்பித்திருந்ததாக நினைவு கூர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் தற்போது மீண்டும் அளிக்கப்பட்ட விளக்கத்தில், 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் கீழ், இந்திய மீனவர்கள் கச்சத்தீவுப் பகுதியில் பாரம்பரிய வழக்கப்படி மீன்பிடி வலைகளை உலர்த்திக்கொள்ளவும், அந்த பகுதியில் இளைப்பாறிச் செல்லவும் மட்டும் உரிமையுள்ளதாக தெளிவுப்படுத்தியுள்ளது. அதனால் அப்பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசு இந்த வழக்கிற்காக அளித்த விளக்கத்தில், 1974ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி, 1976ம் ஆண்டு முதல் அப்பகுதிகளில் இந்திய கப்பல்கள் அந்த பகுதிக்கு செல்வதை நிறுத்தியதை சுட்டிக்காட்டியதோடு, இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க உரிமையில்லை என்றும் தெரிவித்திருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் நேரடியாக தலையிட்டு, கச்சதீவு விவகாரம் தொடர்பான வழக்கில் புதிய பிரமாணப் பத்திரத்தைத் தயாரித்து, சென்னை நீதிமன்றத்தில் மீண்டும் அளிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply