ஐ.நா விசாரணைகளில் பங்காளராக முடியாது : அமைச்சர் கெஹலிய 

இலங்கைக்கு எதிரான ஐ.நா மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் தவறானவை என நாம் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் அதன் விசாரணைகளில் எமக்கு பங்காளராக முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஸ்கைப் மற்றும் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சாட்சியங்களைப் பதிவுசெய்ய விசாரணைக்குழு தயாராவதாகத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் அந்த சந்தர்ப்பத்திலேயே தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பிலுள்ள சட்ட ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. இதில் ஐ.நா விசாரணை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

ஐ.நா.வில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதை வெளிவிவகார அமைச்சர்

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா செயற்பாடுகளுடன் தொடர்புடைய சகல விடயங்களும் இதற்குள் அடங்கும்.

சட்டபூர்வமாக மக்களால் நியமிக்கப்பட்ட அரசாங்கத்தை பயங்கரவாதிகளுடன் சரிசமமாக கருதி விசாரணைகளை முன்னெடுக்க ஐ.நா விசாரணைக்குழு தயாராவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

யுத்த செயற்பாட்டின் ஊடாக பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலே அவ்வாறு அழிக்கப்பட்ட அமைப்பு குறித்தும் இவர்கள் விசாரிக்கத் தயாராகிறார்கள். இந்த விசாரணைகளின் ஊடாக அரசாங்கத்தையும் புலிகளையும் சமமாகக் கருதி செயற்பட தயாராகிறார்கள். துரையப்பா முதல் கெப்பிட்டிகொல்லாவ கொலை வரை புலிகள் செய்த அநியாயங்கள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு போதியளவு ஆதாரங்கள் வழங்கியிருக்கிறோம்.

உண்மைக்குப் புறம்பான தகவல்களின் அடிப்படையிலேயே இலங்கைக்கு எதிரான விசாரணை இடம்பெறவிருக்கிறது. முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்க நாம் மேற்கொண்ட கடந்த கால நடவடிக்கைகள் தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். சுமார் 12 ஆயிரம் பேரை நாம் புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தியுள்ளதோடு பலருக்கு இராணுவத்திலும் சேர வாய்ப்பளித் துள்ளோம். இது தவிர பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்படவும் அவகாசம் வழங்கியுள்ளோம்.

முன்னாள் புலிகள் தொடர்பில் இதனைத் தவிர நாம் என்ன செய்ய வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply