இலங்கையை மோதல்கள் இடம்பெறும் நாடாக தேசத்துக்கு காட்ட முயற்சி : காலி நகரில் ஜனாதிபதி
இன, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க நினைக்கும் அடிப்படை வாதிகளால் தமது மதத்துக்குக்கூட எதனையும் செய்ய முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அடிப்படை வாதிகள் சிலர் இந்த நாட்டில் மதங்களுக்கிடையில் நல்லிணக்கம் இல்லையென்று காட்டவும் அதன் மூலம் மோதல்கள் இடம்பெறும் நாடாக தாய் நாட்டை சர்வதேசத்திற்குக் காட்டவும் முயற்சிப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இன நல்லிணக்கத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்துவது அனைவரதும் பொறுப்பாக வேண்டும் எனவும் தெரிவித்தார். அதேவேளை, எந்த இன, மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் அனைவரும் இந்த தாய் நாட்டிற்கு உரித்தானவர்களே என்பதை எவரும் மறந்து செயற்படக் கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை மெதடிஸ்த திருச் சபையின் 200 வருட நிறைவையொட்டி வரலாற்றுப் புகழ்மிக்க காலி கோட்டை மெதடிஸ்ட் தேவாலயம் புனரமைக்கப்பட்டு நேற்று மீண்டும் சமய வழிபாட்டு நடவடிக் கைகளுக்காக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
மேற்படி தேவாலயம் 195 வருடம் பழைமை வாய்ந்ததுடன், இந்த தேவாலயம் கடற்படையினரின் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டு நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மீள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இலங்கை மெதடிஸ்ட் திருச்சபையின் பிரதம போதகர் கலாநிதி அருட்திரு ஏ. டபிள்யூ. ஜெபநேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
சமய வழிபாட்டு நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண் டதுடன், ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் மதங்களுக்கிடையில் சிறந்த நல்லிணக்கம் நிலவுகின்றது. இன்று மீள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந்த மெதடிஸ்ட் தேவாலயத்தை கடற்படையினரே புனரமைத்துள்ளனர்.
இதேபோன்று யுத்தத்திற்குப் பின்னர் வடக்கு, கிழக்கில் சேதமுற்ற அனைத்து கோவில்கள், விஹாரைகள், கிறிஸ்தவ ஆலயங்களையும் பாதுகாப்புப் படையினர் முன்னின்று புனரமைத்துள்ளனர். அவர்கள் தமது சொந்த விருப்பத்தின் பேரிலேயே அதனை மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய நடவடிக்கைகளில் தமிழ், சிங்களம், முஸ்லிம்களென பேதமின்றி அனைவரும் இணைந்து செயற்படுவதைக் காணமுடிகின்றது.
நான் நேற்று முன்தினம் மாத்தறையில் பெளத்த மத நிகழ்வொன்றிற்குச் சென்றி ருந்தேன். அந்த நிகழ்வைக் கெளரவிக்கும் வகையில் முஸ்லிம் பள்ளிவாசல்களில் பெளத்த கொடிகள் ஏற்றப்பட்டு தமது நல்லிணக்கத்தை அச்சமூகத்தினர் காட்டியிருந்தனர்.
எனினும் சில அடிப்படைவாத சக்திகள் எமது நாட்டில் மதங்களுக்கிடையில் நல்லிணக்கம் இல்லையென்று சர்வதேசத்துக் குக் காட்ட முயற்சிக்கின்றனர். சிறு சிறு சம்பவங்களை உலகிற்கு எடுத்துச் சென்று எமது தாய்நாட்டை மோதல்கள் நிலவும் நாடாக காட்ட முற்படுகின்றனர். இலங்கையில் மதங்களுக்குப் பாரபட்சம் காட்டுவதாக காட்ட முனைகின்றனர். இங்கு அவ்வாறில்லை என்பதை வெளிக் காட்டுவது எமது பொறுப்பாக வேண்டும்.
மெதடிஸ்ட் திருச்சபை 1817ல் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சபையாகும்.
ஆசியாவிலேயே பழைமைவாய்ந்த மெதடிஸ்ட் ஆலயம் எமது நாட்டிலேயே உள்ளது. 1816ல் புறக்கோட்டையில் கலாநிதி தோமஸ் அவர்கள் அதனை ஆரம்பித்து வைத்துள்ளதாக வரலாறுகள் உள்ளன.
வெலிகம வழியாக இலங்கைக்கு பிரவேசித்த பெஞ்சமின் காலியில் இந்த ஆலயத்தை நிறுவியுள்ளார். அவர் இங்கு பாளி மற்றும் சிங்கள மொழியையும் கற்றுத் தேர்ந்தார். அதன் பின்னர் இந்த சபை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது.
காலியிலும் பல பாடசாலைகள் நிறுவப்பட்டுள்ளன. எமது குடும்பத்தினர் பலரும் மெதடிஸ்ட் பாடசாலைகளில் கல்வி பயின்றவர்களாவர். ஏனைய மதங்களுக்கு ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க மேற்கொள்ளும் செயற்பாடு தமது மதத்துக்கு செய்யும் நன்மையான செயலாகும் என்பது எனது நம்பிக்கை. அடிப்படை வாதிகளில் செயற்பாடுகளால் தமது மதத்துக்கு நன்மை ஏற்படப் போவதில்லை. நீதி கிடைக்கப் போவதுமில்லை.
மெதடிஸ்ட் திருச்சபையைப் பொறுத் தவரை அவர்கள் நாட்டிற்கு எதையாவது கொடுக்க வேண்டும் என செயற்படுபவர்கள். இங்கிருந்து எதையும் எடுத்துச் செல்வது அவர்களது நோக்கமல்ல. அவர்கள் இந்த நாட்டை நேசிப்பவர்கள்.
தாய்நாட்டை அன்பு செய்வதும் கெளரவிப்பதும் முக்கியமானதாகும். பெளத்தம், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என்று நாம் எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் எமது தாய் நாட்டை நேசிப்பது மிக முக்கியமாகும்.
நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றோம். அந்தவகையில் காலி மெதடிஸ்ட் தேவாலயத்தை அரசாங்கத்தின் செலவிலேயே புனரமைத்துள்ளோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
காலி கோட்டை மெதடிஸ்ட் தேவாலய புனரமைப்புப் பணிகள் 40 இலட்சம் ரூபா செலவில் இடம்பெற்றுள்ளது. நேற்றைய இந்நிகழ்வில் அந்த திருச்சபையின் மதத் தலைவர்களால் ஜனாதிபதிக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லாசி வேண்டி விஷேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிட த்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply