தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண எந்தவொரு நாட்டையும் முன்மாதிரியாகக் கொள்ளப் போவதில்லை : அமைச்சர் நியோமல் பெரேரா
தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு எந்தவொரு நாட்டையும் இலங்கை முன்மாதிரியாகக் கொள்ளப் போவதில்லை. மாறாக சவால்களுக்கு முகங்கொடுத்த நாடுகளின் அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவே விரும்புவதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார். தென்னாபிரிக்காவை முன்மாதிரியாகக் கொண்டு இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வொன்றை கொண்டுவர விருப்பதாக அரசியல் கட்சிகள் சில சந்தேகம் எழுப்பியிருந்தன. இன்று இலங்கை வரும் தென்னாபிரிக்க விசேட பிரதிநிதியும் அந்நாட்டின் உப ஜனாதிபதியுமான சிறில் ரமபோஷவுடன் இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்படவிருப்பதாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன. இது தொடர்பாகக் கேட்டபோதே பிரதி வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதற்கான விசேட பிரதிநிதியாகவே ரமபோஷ இன்று இலங்கை வருகிறார். இவர் ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்பதுடன், இலங்கை விடயத்தில் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய சிறந்ததொரு தலைவரு மாவார்.
இவர் தனது விஜயத்தில் அரசியல் தலைவர்களைச் சந்திக்கவிருப்பதுடன், இலங்கை விவகாரம் தொடர்பில் அக்கறையுள்ளவர் என்ற ரீதியில் தனது அனுபவங்களை இவர்களுடன் பகிர்ந்துகொள்வார் என்றும் கூறினார். பொதுநலவாய அமைப்பின் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் காணப்படும் நிலையில் ரமபோஷவின் இலங்கை விஜயமானது இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகள் நினைப்பது போன்று எந்தவொரு நாட்டையும் முன்மாதிரியாகக் கொண்டு இலங்கையின் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றை நாம் முன்வைக்கப் போவதில்லை. மாறாக அவர்களின் அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளவே எதிர்பார்த்துள்ளோம். சில கட்சிகள் எந்தவொரு காரணமுமின்றி தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்றார்.
இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் விசேட பிரதி நிதியும் அந்நாட்டின் உப ஜனாதிபதியுமான சிறில் ரமபோசா இன்று இலங்கை வருகின்றார். அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வரும் இவர் அரசாங்கப் பிரதிநிதிகள், எதிர்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலருடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புகளுக்கு உதவிகளை வழங்கும் நோக்குடன் இலங்கை வரும் இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ள அதேநேரம் யாழ்ப்பாணத்திற்கு நேரில் விஜயம் செய்வதற்கும் ஏற்பாடுகள் முன்னெடு க்கப்பட்டுள்ளன.
இலங்கை வரும் ரமபோசாவை இன்றைய தினம் சந்திக்கவிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவருக்கு விசேட விருந்துபசாரமொன்றினை வழங்கவுள்ளாரென ஜனாதிபதிப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தினகரனுக்குத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply