முல்லைப்பெரியாறு அணை விஷயத்தில் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?: கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 23.06.2014 அன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட ஓர் அறிக்கையில், காவிரி நதி நீர்ப் பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு நதி நீர்ப் பிரச்சினையிலும் எப்படி தமிழ்நாட்டின் உரிமை தன்னால் நிலைநாட்டப்பட்டதோ, அதேபோன்று பாலாறு நதிநீர்ப் பிரச்சினையிலும் தமிழ்நாட்டின் உரிமை நிலை நாட்டப்படும் என்று தனக்குத் தானே புகழாரம் சூட்டிக் கொண்டார்.

இதற்கிடையே டெல்லிக்கு வந்த கேரள முதல்-மந்திரியிடம், செய்தியாளர் ஒருவர், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் கேரள அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருப்பது பற்றி கேள்வி கேட்ட நேரத்தில், கேரள முதல்-மந்திரி, “முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நிலை எப்போதும் தெளிவாகவே உள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தினால், அணையைச் சுற்றியுள்ள 5 கரையோர மாவட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்படும்.

அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேரள மாநிலத்துக்கு நிலவும் அச்சத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என மறு ஆய்வு மனுவில் வலியுறுத்தியுள்ளோம். அதன் மீது உச்சநீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்பதைப் பார்க்கவேண்டும். ஒருவேளை கேரளத்துக்கு சாதகமான நிலை காணப்படாவிட்டால், குடியரசுத் தலைவர் மூலம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெளிவுரை கோரும் நடவடிக்கையை மேற்கொள்வதா அல்லது வேண்டாமா என்பதை சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்து முடிவெடுப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கூறியது. அந்தத் தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு கடந்த 1-ம் தேதி கண்காணிப்புக் குழுவை நியமித்தது. அந்தக் குழு செயல்பாட்டைத் தொடங்குவதற்கு முன்பாகவே, கேரளத்தின் மறுஆய்வு மனுவை விசாரணைக்கு அனுமதிக்கவும், அதன்மீது முடிவெடுக்கும் வரை கண்காணிப்புக் குழுவின் செயல்பாட்டுக்குத் தடைவிதிக்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றத்திடம் கேரள அரசு கேட்டுள்ளது. ஆனால் தமிழக அரசின் முதல்-அமைச்சரோ, முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சினையிலே தமிழ்நாட்டின் உரிமை தன்னால் நிலைநாட்டப்பட்டது என்று தனக்குத்தானே புகழ் பாடிக் கொண்டிருக்கிறார்.

கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதாக இல்லை என்ற ஒரே காரணத்தைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இப்போதும் கூறுகிறார்கள். கேரள அரசு அணை பலவீனமாக இருப்பதாகத் தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவினை இப்போது தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையே 2 நாட்களுக்கு முன்பு இதுகுறித்து முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் அளித்த பேட்டியில், “முல்லைப் பெரியாறு அணை மிகுந்த பலத்துடன் உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான அணை முல்லைப் பெரியாறு மட்டுமே. ஆனாலும் அணை பலவீனமாக இருப்பதாக சிலர், கேரள மக்களிடையே பீதியை கிளப்பி வருகின்றனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் இதைப்பற்றி தமிழக அரசின் சார்பில் என்ன செய்யப்போகிறார்கள்? கேரள முதல்வரும், கேரள அரசும் இதைப் பற்றி டெல்லியில் வழக்கறிஞர்களுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சீராய்வு மனுவில் உச்சநீதிமன்றம் தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம் என்று கேரள முதல்வரே டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதுபற்றியெல்லாம் கவலைப்படவோ, ஆலோசிக்கவோ தமிழகத்திலே ஓர் அரசு இருக்கிறதா?.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply