சகல வழிகளிலும் உதவத் தயார் அவுஸ்திரேலியா அறிவிப்பு
யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையின் முன்னேற்றத்துக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அனைத்து வழிகளிலும் உதவத் தயாராகவுள் ளதாக அவுஸ்திரேலிய அமைச்சர் ஸ்கொட் மொரீசன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இலங்கை கடற்படைக்கு இரண்டு கண்காணிப்புக் கப்பல்களைக் கையளிக்கும் வைபவத்தையடுத்து இடம்பெற்ற சந்திப்பின் போதே அவுஸ் திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் மொரிசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது மேற்படி கண்காணிப்புக் கப்பல்களை அன்பளிப்புச் செய்தமை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
இதன்போது புகலிடம் கோரி சட்ட விரோதமாக படகுகளில் பயணிப்போரைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் மற்றும் இலங்கை கடல் பாதுகாப்புத் தரப்பினருக்கிடையிலுள்ள உறவுகளை அவுஸ்திரேலிய அமைச்சர் பாராட்டியுள்ளார். இது மிக நெருங்கிய ஒத்துழைப்பு நடவடிக்கை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
சட்டவிரோத புலம் பெயர்வைத் தடுக்கும் வகையில் இரு நாடுகளும் செயற்பட்டு வருகின்ற போதும் சில குழுக்கள் தொடர்ந்தும் அதனை ஊக்குவித்து வருவதாகக் குறிப்பிட்ட அவுஸ்திரேலிய அமைச்சர், தொடர்ச்சியாக ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறத்தியுள்ளார். ஏற்கனவே இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய அமைச்சர் மொரிசன் யாழ்ப்பாணம். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்ததுடன் யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையின் அபிவிருத்தி தொடர்பிலும் கருத்துக்களைப் பரிமாறியுள் ளார்.
இலங்கை பொருளாதார அபிவிருத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக இதன்போது குறிப்பிட்ட அவர். இந்த முன்னேற்றம் சிறந்த சான்றாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் செயற்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய அமைச்சர், வடக்கில் நடைபெற்றுள்ள தேர்தல் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்பதையும் நாட்டின் செயற்பாடுகள் சிறந்த பயன் தரக் கூடியவை எனவும் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்திற்க்குப் பின்னரான இலங்கையின் முன்னேற்றத்துக்கு முடியுமான அனைத்து வழிகளிலும் உதவ அவுஸ்திரேலியா தயாராகவுள்ள தாகவும் தெரிவித்துள்ளார். இவ்விஜயத்தின் போது முதல் தடவையாக கட்டுநாயக்கா அதிவேக பாதையில் பயணித்துள்ள அவர், இது ஒரு முக்கிய உட்கட்டமைப்பு வசதியாகும் எனவும் இலங்கையின் சுற்றுலாத் துறைக்கான வாய்ப்பு குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன. அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் ரண்டால் உயர் ஸ்தானிகர் ரொபின் மூடி ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க. பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply