எல்லை தாண்டி மீன்பிடிக்க வராதீர்கள் இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எச்சரிக்கை
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 37 மீனவர்கள் மண்டபம் வந்தனர். எல்லை தாண்டி வந்தால் படகுகளுடன் கடலில் மூழ்கடித்து விடுவோம் என்று அதிகாரிகள் எச்சரித்ததாக, மீனவர் ஒருவர் தெரிவித்தார். ராமேசுவரத்தில் இருந்து கடந்த 28–ந்தேதி மீன்பிடிக்கச் சென்ற அந்தோணி, ரெனிஸ்டன், முனியசாமி, குருசாமி, சக்தி, வேல்சாமி கார்த்திக், விஜி உள்பட 17 மீனவர்களையும், மண்டபத்தில் இருந்து கடந்த 5-ந் தேதி மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று அனுராதபுரம் சிறையில் அடைத்திருந்தனர்.மத்திய- மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து 37 மீனவர்களையும் இலங்கை அரசு விடுதலை செய்தது. விடுதலையான மீனவர்கள் அனைவரும் நேற்று பகல் 12 மணியளவில் ரோந்து கப்பலில் அழைத்து வரப்பட்டு சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அங்கிருந்து கப்பல் மூலம் மாலை 4.30 மணிக்கு மண்டபம் கடலோர காவல் நிலையத்துக்கு மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.
பின்னர் மீன்துறை அதிகாரிகள் மூலம் 37 பேரும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஆனந்தக் கண்ணீருடன் மீனவர்களை உறவினர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
முன்னதாக இலங்கையில் உள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்கக் கோரி விடுதலையாகி வந்த மீனவர்கள் மற்றும் உரிமையாளர்கள் மண்டபம் கடலோர காவல்படை முகாம் முன்பு கோஷம் போட்டனர்.
ராமேசுவரம் திரும்பிய மீனவர் பிரான்சிஸ் கூறியதாவது:-
கச்சத்தீவு அருகே கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது பெரிய ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மோதுவது போல் எங்களை நோக்கி வந்தனர். திடீரென்று துப்பாக்கி முனையில் படகுகளை சுற்றி வளைத்து எங்களை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். அதன்பின் மன்னாரில் உள்ள மீன்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
எங்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் தங்குவதற்கு சரியான இட வசதி இல்லை. சரியான உணவு தரவில்லை. எங்களை வருகிற 21–ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. திடீரென 11–ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டோம்.
ஆனால் எங்கள் 7 படகுகள் விடுக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
“எல்லை தாண்டி மீன்பிடிக்க வராதீர்கள். மீறினால் படகுகளுடன் சேர்த்து கடலில் மூழ்கடித்து விடுவோம்” என்று மன்னாரில் மீன்துறை அதிகாரிகள் எங்களை எச்சரித்தனர். எல்லை தாண்டி வருபவர்களை நாங்கள் என்ன செய்தாலும் யாரும் எங்களை கேட்க முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply