பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி ஜெர்மனி வந்தடைந்தார்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசிலுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்தார்.பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு பிரேசில் நாட்டின் வட கிழக்கு கடற்கரை நகரமான போர்டாலிசாவில் நாளையும், நாளை மறுநாளும் (14, 15–ந்தேதி) நடைபெறுகிறது.இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்பதற்காக அவர் இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார். அவருடன் மத்திய வர்த்தகத்துறை இணை மந்திரி நிர்மலா சீதாராமன், தேசிய பாது காப்பு ஆலோசகர், ஏ.கே. தோவால், வெளியுறவுச் செயலாளர் சுஜாதாசிங், நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் ஆகியோர் அடங்கிய உயர் நிலைக்குழுவும் சென்றது.டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமரின் தனி விமானம் இன்று இரவு ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரம் சென்றடைந்தது. பெர்லின் விமான நிலையத்தில் ஜெர்மனிக்கான இந்திய உயர் தூதர் விஜய் கோகலே மற்றும் ஜெர்மனி நாட்டின் உயரதிகாரிகள் வரவேற்றனர்.

இன்றிரவு பெர்லினில் ஓய்வெடுக்கும் பிரதமர் மோடி மற்றும் அவருடன் சென்றுள்ள குழுவினர் நாளை காலை பிரேசிலுக்கு புறப்படுகின்றனர்.

முன்னதாக, பெர்லினில் தங்கி இருக்கும் போது அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கெலை சந்திக்க மோடி திட்டமிட்டு இருந்தார். ஆனால் கால்பந்து இறுதிப் போட்டியில் ஜெர்மனி அணி மோதுவதை நேரில் பார்க்க ஏஞ்சலா மெர்கெல் பிரேசில் சென்று தங்கி உள்ளார். எனவே பிரேசிலில் இருவரும் சந்தித்து பேசுகிறார்கள்.

நாளை பிரேசிலில் தொடங்குவது 6–வது பிரிக்ஸ் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் தில்மாரூசேப், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜீஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியாக சந்தித்து இரு நாட்டு உறவு மற்றும் வர்த்தகம் பற்றி பேச்சு நடத்துகிறார்.

கடந்த மாநாடு தென் ஆப்பிரிக்காவில் நடந்த போது, பிரிக்ஸ் நாடுகள் வளர்ச்சிக்காக வங்கி அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அந்த தீர்மானத்தை செயல்படுத்தும் வகையில் ‘பிரிக்ஸ்’ வளர்ச்சி வங்கியின் தலைமையகத்தை எங்கு அமைக்கலாம் என்பது பற்றி இந்த மாநாட்டில் முடிவு எடுக்கப்படுகிறது.

சீனாவின் ஷாங்காய் நகர் அல்லது இந்தியத் தலைநகர் டெல்லியில் பிரிக்ஸ் வங்கி அமைக்கப்படும் வாய்ப்புகள் தொடர்பாக மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டைப் பார்வையிட தென் அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா, பொலிவியா, சிலி, கொலம்பியா, ஈக்வேடார், கயானா, பராகுவே, பெரு, சுரிநாம், உருகுவே, வெனிசுலா ஆகிய நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களைச் சந்தித்து அறிமுகத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.

மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக ஏற்கனவே ரஷியாவும், சீனாவும் உள்ளன. அந்த கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை சேர்க்க ஆதரவு தர வேண்டும் என்று ரஷியா, சீன தலைவர்களை சந்திக்கும் போது மோடி கோருவார்.

தென் அமெரிக்க தலைவர்களுடனான சந்திப்பின் போது தொழில், வர்த்தகம், பொருளாதார நல்லுறவு தொடர்பாக பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பேச்சு நடத்துகிறார்கள்.

பிரேசிலில் மொத்தம் 5 நாட்கள் சுற்றுப் பயணம் செய்யும் பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாட்டுக்குப் பின்னர் பல்வேறு நாட்டின் தலைவர்களை சந்திக்கிறார். 17–ந்தேதி இரவு ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் தங்கிவிட்டு 18–ந்தேதி காலையில் டெல்லி திரும்புகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply