அரசியல் தீர்வுத் திட்ட யோசனையொன்றைத் தயாரிக்கும் பணியில் ஆளும் கட்சிகளின் அரசியல் தலைவர்கள் குழு

வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மனிதநேய நடவடிக்கைகள் முடியும் தறுவாயில் இருப்பதால் ஆளும் கட்சியிலிருக்கும் அரசியல்வாதிகள் குழுவொன்று 13வது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான யோசனைத் திட்டமொன்றைத் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர்களான திஸ்ஸ வித்தாரண, டி.ஈ.டபிள்யூ.குணசேகர, ராஜித சேனாரட்ன, டிலான் பெரேரா, டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மேல்மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

மாகாணசபை முறைமைகளை அறிமுகப்படுத்திய 13வது திருத்தச்சட்டமூலத்தில் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள் குறித்து இந்தக் குழுவினர் கடந்தவாரம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

அரசியலமைப்புக்கு அமைய மாகாணசபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதைத் தாம் பிரேரித்திருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் சேனாரட்ன, ஆனாலும், சிறிய குற்றங்களுக்குப் பொலிஸ் அதிகாரங்கள் பயன்படுத்தப்படுவது மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறினார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவானது அதிகாரங்களைப் பகிர்வதற்கான பொதுவான இணக்கப்பாட்டைப் பெற்றிருப்பதாகவும், தமது குழு 13வது திருத்தச்சட்டமூல அமுலாக்கத்தை அர்த்தமுள்ளதாக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

“ஏற்கனவே அரசியலமைப்பில் இருப்பதை அமுல்படுத்துவதைப் பற்றியே நாம் ஆராய்ந்து வருகின்றோம். இது அதிகாரங்களைப் பகிர்வதற்கான ஆரம்பப் படிமுறையாகவிருக்கும்” என்றார் அவர்.

13வது திருத்தச்சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற இந்தியாவின் அழுத்தம் இருக்கிறதா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரட்ன, “எமது குழு சொந்த முயற்சியிலேயெ இந்த ஆரம்பகட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்தது. எனினும், பயங்கரவாதம் இராணுவ ரீதியாக ஒழிக்கப்பட்ட பின்னர் தேசிய பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வுமூலம் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது” என்றார்.

ஆளும் கட்சியிலுள்ள அரசியல்வாதிகளால் தயாரிக்கப்படும் இந்த அறிக்கை அனைத்து மாகாணசபை முதலமைச்சர்களுக்கும் அனுப்பிவைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply