ஐக்கிய இலங்கையை ஏற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கையொன்றை ஏற்றுக்கொள்வதாக சத்தியக்கடதாசி ஊடாக உச்சநீதிமன்றத்துக்கு அறிவிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று இணக்கம் தெரிவித்தது. வட மாகாணத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனி இராச்சியம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தையும் தேர்தல் முடிவையும் இரத்துச் செய்யுமாறு கோரி ஐந்து அமைப்புகள் தாக்கல் செய்திருந்த ஏழு மனுக்கள் மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகஈஸ்வரன் இவ்வாறு சத்தியக்கடதாசியொன்றை வழங்க இணக்கம் தெரிவித்திருந்தார். மேற்படி மனு மீதான விசாரணை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், உச்சநீதிமன்ற நீதியரசர்களான ரோஹினி மாரசிங்க, பிரியந்த ஜயவர்த்தன ஆகியோர் முன்னி லையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

நாட்டில் உள்ள அனைவரும் ஒரே அரசியலமைப்பையே பின்பற்ற வேண்டு மெனவும், நீதிமன்றத்திற்கு வரும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இன, மத பேதமின்றி சமமாகவே நடத்தப் படுகின்றனர் எனவும் பிரதம நீதியரசர் இதன்போது தெரிவித்தார்.

வண.பெங்கமுவே நாளக்க தேரர், குணதாச அமரசேகர, கால்லகே புண்ணிய வர்த்தன, யூ. ஏ. அபயக்கோன், ரவி குமார, உணவட்டுனே அனுரசிறி மற்றும் எச்.கே.டி.சந்திரசோம ஆகியோர் மேற்படி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், தமிழரசுக் கட்சித் தலைவருமான மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தனி இராச்சியமொன்றை உருவாக்கும் நோக்கத்துடனேயே தமிழ ரசுக் கட்சி செயற்படுவதாக அறிவிக்குமாறு இந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது. மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கனிஸ்கவிதாரண, பாலித கமகே, கபில கமகே ஆகியோரும், சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் பிள்ளையும் ஆஜராகியிருந்தனர். மனுமீதான விசாரணை ஜூலை 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply