சிறுபான்மை மக்களுக்காக தி.மு.க. நிறைவேற்றிய திட்டங்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, சிறுபான்மை மக்களுக்கு எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி உள்ளது என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மகாலில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். பேராயர் எஸ்றா சற்குணம், முன்னாள் அமைச்சர்கள் ரகுமான் கான், மைதீன் கான், தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப், தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும், தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொள்வார். தற்போது, அவரை தொடர்ந்து நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, எத்தனையோ திட்டங்களை தமிழக மக்களுக்கும், குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கும் நிறைவேற்றி தந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் 3.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. பெண்களுக்கு சொத்துகளில் சம உரிமை வேண்டும் என்பதை 1929-ம் ஆண்டு தந்தை பெரியார் தீர்மானமாக நிறைவேற்றினார். அதனை, 60 ஆண்டுகளுக்கு பிறகு, 1989-ல் சட்ட வடிவமாக்கி தந்தவர் கருணாநிதி தான்.

தேர்தலில், வெற்றி, தோல்வி வரலாம். ஆனால் என்றும் தி.மு.க.வோடு தோழமை உணர்வுடன் துணை நிற்கும் தமிழ் மாநில தேசிய லீக் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply