வேட்டி விவகாரம் ஜெயலலிதா எச்சரிக்கை
வேட்டி உடுத்தி வந்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, இது போன்ற விதிகளை அமல்படுத்தும் தனியார் கிளப்புகள், வேட்டிக்கு தடை விதிக்கும் விதிமுறையை நீக்க நடப்புக் கூட்டத்தொடரில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் மற்றும் இரு உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் வேட்டி உடுத்திச் சென்றதால் , கிளப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கு ஏற்கனவே திமுக தலைவர் மு.கருணாநிதியும் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த சர்ச்சை குறித்து தமிழக சட்டப் பேரவையில் அறிக்கை வாசித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் ஒரு தனியார் கிளப்பில் வேட்டி அணிந்து சென்றதால் ஒரு நீதிபதிக்கும் , இரண்டு வழக்கறிஞர்களும் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய தமிழர் உடையான வேட்டி அணிவதற்கு தடை விதிக்க அந்த கிளப்பிற்கு அதிகாரம் இல்லை என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தனியார் கிளப்பின் உள்விதிகளின்படி லுங்கி, பர்முடாஸ் போன்ற உடைகளுக்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது,வேட்டிக்கு தடை விதிக்கப்படவில்லை , எனவே இந்த தடை விதிக்கப்பட்டது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றும் முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும்படி பதிவுத்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இது குறித்து விளக்கம் அளிக்க அந்த கிளப்புக்கு கடிதம் அனுப்ப உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடந்தால், இது போன்ற கிளப்புகளின் உரிமத்தை ரத்து செய்ய தமிழக அரசு தயங்காது என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply