சூரியசக்தி மின் உற்பத்தியில் தமிழகம் பின்தங்கியே உள்ளது: கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேள்வி:- 2,325 கோடி ரூபாய் செலவில் சாலைகள்-பாலங்கள்-சுரங்கப் பாதைகள் அமைக்கும் திட்டங்களை 110-வது விதியின்கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 25.07.2014 அன்று அறிவித்து அனைத்து பத்திரிகைகளிலும் பெரிதாகச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறதே?. பதில்:- அன்றாடம் முதல்-அமைச்சரே ஒவ்வொரு துறை சார்பிலும் 110-வது விதியின் கீழ் அந்த ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகளை எல்லாம் செய்து விட்டுப்போக வேண்டியது தானே? 110-வது விதியின் கீழ் அறிக்கை என்றால், ஏதோ ஒரு நாள் அவசர அவசியத்திற்காகத் தரப்படுவதாகும். அதுதான் மரபும் கூட. ஆனால் எந்த அமைச்சர்களும் பெரிய அறிவிப்புகளைச் செய்ய முடியாமல், ஒவ்வொரு நாளும் முதல்-அமைச்சரே அவையில் மணிக்கணக்கில் 110-வது அறிக்கைகளைப் படிப்பதும், அதற்கு ஒரு சிலர் பாராட்டுத் தெரிவிப்பதும், அந்த அறிக்கைகளை ஒட்டியே முதல்-அமைச்சர் எதிர்க் கட்சிகளைக் குற்றஞ்சாட்டிப் பேசுவதும், அதற்குப் பதிலளிக்க அவர்களுக்குரிய உரிமைகளை மறுப்பதும் என்ற போக்கில் அன்றாடம் பேரவை நடந்து வருகிறது. அதிலே ஒன்றாகத்தான் நெடுஞ்சாலைத் துறை பற்றிய மானியம் விவாதம் முடிந்த ஒரு வாரத்தில் அந்தத் துறை பற்றிய அறிவிப்புகளை 2,325 கோடி ரூபாய்க்கு 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் பேரவையில் செய்திருக்கிறார்.

கேள்வி:- தமிழகத்தில் 10 ஆயிரம் வீடுகளில் தலா ஒரு கிலோ வாட் சூரிய சக்தி மின் உற்பத்தி சாதனம் நிறுவினால், 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற இந்த அரசின் திட்டத்தின் படி இதுவரை எத்தனை வீடுகளில் இந்தச் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது?.

பதில்:- அரசிடம் கேட்க வேண்டிய கேள்வி என்னிடம் கேட்கப்படுகிறது. பத்திரிகையில் வந்த செய்திப்படி, இதுவரை 35 வீடுகளில் மட்டுமே சூரிய சக்தி மின் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, சூரியசக்தி மின் உற்பத்தியில், தமிழகம் பின்தங்கியே உள்ளது.

கேள்வி:- நெல் கொள்முதலுக்கு மாநில அரசுகள் ஊக்கத் தொகை வழங்கக் கூடாதென்று மத்திய அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு பற்றி?.

பதில்:- இதுபற்றி நான் விவரமாக அறிக்கை கொடுத்திருக்கிறேன். இந்த ஊக்கத் தொகை கொடுக்கின்ற வரலாறே எப்படி ஆரம்பமானது என்பதை நான் கூற விரும்புகிறேன். மத்திய வேளாண்மைத் துறை அமைச்சராக பாபு ஜெகஜீவன்ராம் இருந்த போதுதான், நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையை விவசாயிகள் என்னிடம் தெரிவித்த நேரத்தில், அவர்களின் சார்பாக டெல்லி சென்ற நான் மத்திய மந்திரியிடம் அதுபற்றிப் பேசினேன். ஜெகஜீவன்ராமும் என்னென்ன வழியையோ சிந்தித்துப் பார்த்துவிட்டு, கொள்முதல் விலையை அதிகப்படுத்தித் தர இயலாது என்பதற்கான காரணங்களைச் சொல்லி விட்டு, இறுதியாக அவர்தான் எனக்கு, ‘‘ஊக்கத் தொகை என்கிற பெயரால், போக்குவரத்துச் செலவுகள் என்கிற பெயரால் மாநில அரசாக ஒரு தொகையைக் கொடுக்கலாம்’’ என்று தெரிவித்தார்.

அதன் பிறகு தான் தமிழக அரசு முதன் முதலாக இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விவசாயிகளுக்கு 15 ரூபாய் ஊக்கத்தொகை என்ற பெயரில் அளித்தது. அதற்குத்தான் தற்போது மத்திய அரசினால் ஆபத்து வரும் போல் இருக்கிறது.

கேள்வி:- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசே எடுத்துக் கொண்ட போதிலும், அங்கே மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதாகவும், கல்விக் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் சொல்கிறார்களே?.

பதில்:- இதுபற்றி பலமுறை பல தரப்பினராலும் சொல்லப்பட்ட போதிலும் இந்த அரசு அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. கேரளாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி நிறுவனங்கள் சார்பில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ப்பதற்காக தனியே நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ள அனுமதிக்குமாறு கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம், ‘‘தனியார் மருத்துவக் கல்லூரி நிறுவனங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு என்று தனியே நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது’’ என்று தெரிவித்திருக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply