சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளுக்கு வரன் தேடும் அலுவலகம் திறப்பு

ஈராக்கில் தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். 2003–ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது சில அரபு நாட்டினர் சேர்ந்து இந்த படையை உருவாக்கினார்கள். அப்போது பெயரளவுக்கு தான் இது செயல்பட்டு வந்தது.

ஆனால் 2006–ம் ஆண்டுக்கு பிறகு இது தீவிரமாக செயல்பட ஆரம்பித்தது. சிரியா போருக்கு பிறகு இந்த படையில் ஏராளமானோர் சேர்ந்தனர். தற்போது 11 ஆயிரம் பேர் படையில் உள்ளனர். அதில் 6 ஆயிரம் பேர் ஈராக்கில் போரிட்டு வருகிறார்கள். 5 ஆயிரம் பேர் சிரியாவின் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு உள்ளனர்.

இவர்களுக்கு பின்னணில் 15 ஆயிரம் பேர் வரை படையில் சேருவதற்கு தயாராக உள்ளனர். விரைவில் 60 ஆயிரம் பேரை சேர்த்து பெரும் படையை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சிரியா மற்றும் ஈராக்கில் பாங்கி மற்றும் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்த ரூ.12 ஆயிரம் கோடி பணம் இவர்களிடம் உள்ளது. இதை வைத்து பெரும் படையை உருவாக்கி வருகிறார்கள். ஒவ்வொரு வீரருக்கும் மாதம் ரூ.36 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

அரபு நாடுகள் பலவற்றில் சன்னி முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களும் இவர்களுக்கு பண உதவி செய்து வருகிறார்கள். இந்த படையின் தலைவராக அபுபக்கர் அல் பகாதி செயல்பட்டு வருகிறார்.

வடக்கு சிரியாவில் ஈராக் எல்லையோரம் பல பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் அப்பகுதி முழுவதையும் ஒன்றிணைத்து ஐ.எஸ்.ஐ.எஸ்.-சின் ஆட்சிக்கு உட்பட்ட தனிநாடாகவும்  இந்நிலப்பரப்பின் ‘கலிபா’வாக (மன்னர்) ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரான அபு பக்ர் அல் பக்தாதி விளங்குவார் என்றும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் உள்ள திருமணமாகாத ’ஜிஹாத்’ போராளிகளுக்கு வரன் தேடும் அலுவலகத்தை அந்த இயக்கம் இன்று திறந்துள்ளது.

வடக்கு சிரியாவில் உள்ள அல் பாப் என்ற பகுதியில் திறக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளை திருமணம் செய்துக் கொள்ள விரும்பும் இளம் பெண்கள் மற்றும் விதவைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அவர்களை திருமணம் செய்துக் கொள்ள விரும்பும் போராளிகள் சம்பந்தப்பட்ட பெண்களின் வீட்டுக்கு சென்று, முறைப்படி பெண் கேட்டு, இஸ்லாமிய சம்பிரதாயப்படி மனைவியாக்கிக் கொள்வார்கள் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply