வாகனத்தில் கஞ்சா விவகாரம் ஊடகவியலாளர்கள் புகார் பற்றி போலிஸ் விசாரணை

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு ஊடகப் பயிற்சியொன்றுக்காகச் சென்ற யாழ் ஊடகவியலாளர்கள் பயணஞ்செய்த வாகனத்தில் இராணுவத்தினர் கஞ்சாவை வைத்ததாகவும், காவல்துறையினர் தம்மை கைது செய்து முறைகேடாக நடத்தியதாகவும் செய்திருந்த முறைப்பாடு தொடர்பாக செவ்வாயன்று ஓமந்தை காவல்துறையினர் அந்த ஊடக வியலாளர்களிடம் விசாரணை செய்திருக்கின்றனர். காலை 11 மணி முதல் 3 மணித்தியாலங்களுக்கு மேலாக இந்த விசாரணை நடைபெற்றிருக்கின்றது. விசாரணையின் முடிவில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு வரும் வெள்ளிக்கிழமை வவுனியா நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இந்த விசாரணைக்காக சம்பந்தப்பட்ட ஏழு ஊடகவியலாளர்களும் ஓமந்தை காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர்.இவர்களில் ஒருவராகிய யாழ் தினக்குரல் செய்தித்தாளின் ஹம்சனன் இந்த விசாரணை பற்றி தகவல் தெரிவிக்கையில் தாங்கள் இராணுவத்திற்கு எதிராகவும், காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராகவும் செய்திருந்த முறைப்பாடு தொடர்பாகவே விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறினார்.

மாங்குளம் உதவி காவல்துறை அதிகாரியின் தலைமையிலான காவல்துறை குழுவினரே இந்த விசாரணையை நடத்தியதாகவும், தாங்கள் குற்றம் சுமத்தியிதருந்த காவல்துறை உத்தியோகத்தரிடமும் தங்கள் முன்னிலையில் விசாரணை நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விசாரணை தொடர்பாக காவல்துறை பேச்சாளரிடம் கேட்ட போது யாழ் ஊடகவியலாளர்களுக்கு ஓமந்தை சோதனைச்சாவடியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக முழு விபரங்களையும் உதவி காவல்துறை அதிகாரி ஒருவர் விபரமாகக் கேட்டறிந்திருப்பதாகக் கூறினார். இந்த ஊடகவியலாளர்கள் விசாரணை செய்யப்படவில்லை. சாட்சிகளிடம் இருந்து விபரங்களைப் பெறுகின்ற வகையில் சம்பவம் குறித்து கேட்டறியப்பட்டிருக்கின்றது என்றார் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண.

இதேவேளை இந்த ஊடகவியலாளர்கள் பயணஞ்செய்த வாகனத்தில் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டிருந்த வாகன சாரதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். ஆனால் அவருடைய வாகனம் இன்னும் ஓமந்தை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணையின்போது இந்த வாகனத்தை சாரதியிடம் ஒப்படைக்கப்படுவது பற்றி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply