இலங்கையில் காசா தாக்குதல்களைக் கண்டித்து முஸ்லீம்கள் இன்று ஆர்ப்பாட்டம்
காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களை கண்டித்து இலங்கை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று செவ்வாய்க்கிழமை புனித ரமதான் பண்டிகையை கொண்டாடும் அதே வேளை இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, அம்பாரை மாவட்டத்தில் பாலமுனை மற்றும் சின்னப்பாலமுனை ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்பாட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்து கொண்டார்கள்.பள்ளிவாசல்களில்களிலும் பொது இடங்களிலும் இன்று காலை புனித ரமதான் தொழுகைக்காக ஒன்று கூடிய முஸ்லிம்கள் தொழுகையின் பின்னர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் குறிப்பாக பலஸ்தீன் காஸா மீதான தாக்குதல்களில் கொல்லப்பட்ட குழந்தைகளின் படங்கள் உட்பட அது தொடர்பான புகைப்படங்களையும் தமது கைகளில் ஏந்தியவாறு காணப்பட்டார்கள்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் வாசக அட்டைகளை ஏந்திவாறு கோஷங்களையும் எழுப்பிய முஸ்லிம்கள் யுத்தத்தை நிறுத்தி முஸ்லிம்களுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.
ஆர்ப்பாட்டங்களின் முடிவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தேசிய கொடிகளும் ஆர்பாட்டக்காரர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply