ஐ.நா.விசாரணைக்கு எந்தவொரு ஆசிய நாடும் இடமளிக்கமாட்டாது : பீரிஸ்

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் விசாரணை ஒன்றை நடத்துவதற்கு பெரும்பாலும் எந்த ஆசிய நாடும் இடமளிக்காது என்று கூறியுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இது சந்தர்ப்ப வசத்தாலோ அல்லது விபத்தாகவோ வந்த விடயம் அல்ல என்றும், இந்த நாடுகளை அத்தகைய தீர்மானத்துக்கு வருவதற்கான இணக்க நிலைக்கு இலங்கை அரசே வரவழைத்தது என்றும் கூறினார்.கடந்த வார இறுதியில் குருநாகலில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். மேற்குலகின் அரசியல் நலன்களுக்காக இலங்கை மீது திணிக்கப்பட்டுள்ள இந்த விசாரணை அநீதியானது என்பதில் பூமிப் பந்தின் பெரும்பாலான நாடுகள் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளன என்றார் அவர்.

எங்கள் நாட்டுக்குத் தீங்கு விளைவிப்பதற்காகப் பெரும்தொகைப் பணம், அரசியல் செல்வாக்கு எல்லாம் பிரயோகிக்கப்பட்டாலும் உண்மை ஒருநாள் வெளிப்பட்டே தீரும் என்று குறிப்பிட்ட அவர், பொதுநலவாய அமைப்பின் வெளிவிவகார அமைச்சர்களின் நடவடிக்கைகள் குழுவின் தலைவரான தன்ஸானிய வெளிவிவகார அமைச்சர் அண்மையில் இலங்கை வந்திருந்த போது இலங்கைக்கான ஆதரவை உறுதியாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தியிருந்தமையை நினைவுபடுத்தினார்.

இது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஆதரவு பெருகி வருவதை உறுதிப்படுத்தும் ஒரு சுட்டி என்றும் பேராசிரியர் பீரிஸ் குறிப்பிட்டார். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் யுத்தம் முடிவுற்று ஐந்து வருடங்களில் இலங்கை எட்டியிருக்கும் அபிவிருத்தியும், இணக்கமும் ஏனைய நாடுகளை விட மிக உயர்வானது எனக் குறிப்பிட்டு தன்ஸானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கையை மெச்சியிருக்கின்றார் என்பதையும் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply