ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் முதல்முறையாக கடும் பொருளாதாரத் தடை விதிப்பு
ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் முதல்முறையாக கடும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. உக்ரைனில் பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கையில் ரஷியா ஒத்துழைக்கத் தவறியதைத் தொடர்ந்து அந்த நாட்டை கடுமையாக எச்சரிக்கும் வகையில் இந்தப் பொருளாதாரத்தடையை விதித்துள்ளதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த தூதர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் ரஷிய வங்கிகளின் பரிவர்த்தனைக்கு தடை விதிப்பது, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து ரஷிய ராணுவத்துக்கு அதிநவீன தொழில்நுட்ப தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் கிரீமியா பிராந்தியத்தை கடந்த மார்ச் மாதம் ரஷியா இணைத்துக்கொண்ட பிறகு முதன்முறையாக இதுபோன்ற வர்த்தகத் தடையை ஐரோப்பிய யூனியன் விதித்துள்ளது.
முன்னதாக, உக்ரைன் விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் தொடர்புடைய ரஷிய உயர் அதிகாரிகள் 80-க்கும் மேற்பட்டோருக்கும், உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தலைவர்களுக்கும், அதன் நிறுவனங்களுக்கும் ஐரோப்பிய யூனியன் விசா தடை மட்டுமே விதித்திருந்தது.
இது குறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜோஸ் மனுவேல் பரோசோவும், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஹெர்மன் வான் ரோம்பியும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உக்ரைன் மட்டுமின்றி, பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் ரஷிய கூட்டமைப்பை எச்சரிப்பதற்காகவே அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்படும். மேலும், தமது நடவடிக்கை காரணமாகவே தனிமைப்படுத்தப்பட்டு வருகிறோம் என்பதையும் ரஷியா அறியும்.
எனினும், உக்ரைன் விவகாரத்துக்கு தீர்வு காணும் நடவடிக்கையை ரஷியா தொடங்கினால், அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை வாபஸ் பெற ஐரோப்பிய யூனியன் தயாராக உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply