நேபாளத்தில் நிலச்சரிவு: 8 பேர் பலி-150 பேர் மாயம்
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் போத்கோஷி என்ற ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் மீது ஒரு மலையில் இருந்து கற்களும், மண்ணும் பெயர்ந்து விழுந்தது. இதனால் அதன் நீரோட்டம் தடைபட்டது. எனவே ஆற்றின் நீரோட்டம் மாறி நாலாபுறமும் பாய்ந்து பல கிராமங்களில் புகுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதன் காரணமாக தலைநகர் காத்மாண்டுக்கு வடகிழக்கே 75 கி.மீ. தொலைவில் உள்ள மங்கா என்ற கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த மலை கிராமமே மண்ணில் புதைந்தது.
அங்கிருந்த 24 வீடுகள் மண்ணுக்குள் மூழ்கின. உடனே உள்ளூர் மக்கள் உதவியுடன் ராணுவத்தினர் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதில் 8 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. ஆனால் அங்கு தங்கியிருந்த மேலும் 150 பேரை காணவில்லை. எனவே அவர்களும் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பலர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் காத்மாண்டில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே போத் கோஷி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு சிந்துபால்சவுக் மாவட்டத்தில் பார்காபிஷே, லமேகாங்கூ, காதிர்சவுர் மற்றும் டொலால்கட் ஆகிய கிராமங்களையும் சூழ்ந்துள்ளது.
இதனால் அங்கும் இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறும் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு மிக உயரமான இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply