புகலிடம் கோரி இலங்கை வருவோர் தொகை 1562ஆக அதிகரிப்பு

இலங்கையில் புகலிடம் கோரியுள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு அகதிகள் அரசியல் விவகாரத்தை முறையான விதத்தில் நிர்வகிப்பதற்கு யு.என்.எச்.சி.ஆர் அமைப்பு தவறிவிட்டது என அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்பு வதை அரசாங்கம் ஊக்குவித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் தஞ்சமடைந்திருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறிப்பாக பாகிஸ்தானியர் களைத் திருப்பியனுப்புவது குறித்து தொடர்ச்சியாக கேள்வியெழுப்பப்படுவதாகத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சு இதுதொடர்பாக விளக்கமொன்றையும் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டிலிருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்படுவதையே அரசாங்கம் ஊக்குவிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களால் பயன்படுத்தப்படும் ஒரு நாடாக மாறியுள்ளது. 2013ஆம் 14ஆம் ஆண்டுகளில் இவ்வாறு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கமைய 1562 புகலிடக் கோரிக்கையாளர்களும் 308 அகதிகளும் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளனர்.

சட்டவிரோத ஆட்கடத்தல் காரர்களால் பாதிக்கப்பட்டவர்களே பெரும்பாலும் இதில் உள்ளடங்கியுள்ளனர். அவ்வாறு வருபவர்களை மூன்றாவது நாட்டில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. எனினும் 2013, 2014ஆம் ஆண்டு காலப் பகுதியில் இந்த நடவடிக்கை மந்தகதியில் இடம்பெற்று வருவதால் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதானது கவலையளிக்கிறது.

இவ்வாறு புகலிடம் கோருபவர்களின் சுகாதார நிலை உள்ளிட்ட விடயங்கள் அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகின்றன. 2014ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த புகலிடக் கோரிக்கையாளர்களில் 10 பேருக்கு மலேரியா நோய் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதுடன், இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை இலங்கை சர்வதேச சட்டங்களுக்கு அமைய கையாண்டு வருகிறது. அதிகரித்துவரும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிலையத்துடன் (யு.என்.எச்.சி. ஆர்) தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவந்தது. இந்த எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு 2013ஆம் ஆண்டு அந்த அமைப்பிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் மூன்றாவது நாட்டில் மீள்குடியமர்த்தப்படுவதற்கு முன்னர் அவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடமொன்றை ஏற்படுத்திக் கொடுத்தல், புகலிடம் மறுக்கப்பட்டவர்கள் தொடர்பில் யுஎன்எச்சிஆர் பொறுப்பேற்க வேண்டும், குறுகிய காலத்துக்குள் அவர்களை மூன்றாவது நாட்டில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசாங்கம் யு.என்.எச்.ஆர்.சி அமைப்பிடம் முன்வைத்திருந்தது.

எனினும், யுஎன்எச்சிஆர் நிறுவனம் போதியளவு நடவடிக்கை எடுக்கவில்லை. இல்லாவிட்டால் மூன்றாவது நாட்டில் அவர்களை மீள்குடியேற்றும் நடவடிக்கையை யாவது துரிதப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கும் அந்த அமைப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. சிலருடைய விண்ணப்பங்கள் 5 வருடங்களுக்கு மேலாகத் தீர்க்கப்படாமலும் உள்ளன.இவ்வாறான நிலையில், சர்வதேச கடப்பாடுகளை உள்நாட்டு விவகாரத்துடன் சமமாக முன்கொண்டு செல்வது அரசாங்கத்தின் கடமையாகும். இவ்விடயத்தில் காலவரையறையொன்று இல்லாமையால் ஏற்படும் சுமைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நாட்டின் பாதுகாப்பையும், பிராந்தியத்தின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் திருப்பியனுப்பப்படுவதையே அரசாங்கம் ஊக்குவிக்கிறது என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply