இலங்கையின் ஒத்துழைப்பைக் கோரியது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கட் அணிவீரர்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு இலங்கையின் ஒத்துழைப்பை பாகிஸ்தான் அதிகாரிகள் கோரியிருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். 

கடந்த செவ்வாய்க்கிழமை லாகூரில் இலங்கைக் கிரிக்கட் அணி வீரர்களை இலக்குவைத்து இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இந்தச் சம்பவத்தில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் 6 பேர் காயமடைந்திருந்ததுடன், பாதுகாப்பு வழங்கிச் சென்றிருந்த பாகிஸ்தான் பொலிஸார் 6 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நடத்தவேண்டுமென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாகிஸ்தான் ஜனாதிபதி அசீவ் அலி சர்தாரியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் விசாரணைகளுக்கு இலங்கையணியின் ஒத்துழைப்பு வேண்டுமென பாகிஸ்தான் கோரிக்கைவிடுத்திருப்பதாக ரோஹித்த போகல்லாகம கூறியுள்ளார்.

லாகூரில் நடைபெற்ற சம்பவம் குறித்து இணைந்த விசாரணைகளுக்குத் தயாரில்லையெனவும், தேவைப்படும் சந்தர்ப்பத்தில் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு அறிவித்ததாக அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணைகள் ஆசியப் பிராந்தியத்துக்கும் அப்பால் சென்று வெளிநாட்டவர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென ரோஹித்த போகல்லாகம, சர்தாரியிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகத் தெரிவருகிறது.
இதேநேரம், இலங்கை கிரிக்கட் அணி மீது நடத்தப்பட் தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கான உதவிகளை வழங்க அவுஸ்ரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முன்வைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை வெளிவிவகார அமைச்சரைத் தொடர்புகொண்ட ஆசியப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சட் பௌச்சர், லாகூர் தாக்குதல் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கண்டறியப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.

விசாரணைகளுக்கு உதவி வழங்கத் தாம் தயார் என பௌச்சர், போகல்லாகமவிடம் கூறியதாகவும், அதேபோல அமைச்சர் ரோஹித்த போகல்லாகமவைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீவன் ஸ்மித் விசாரஇணைகளுக்கு உதவி வழங்க தமது நாடு தயார் எனக் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இலங்கைக் கிரிக்கட் அணி வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசாரணைக் குழுவொன்றை அனுப்ப அரசாங்கம் தயாராகவிருப்பதாக இலங்கை பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை

இலங்கைக் கிரிக்கட் அணி வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகளைப் பாகிஸ்தான் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றபோதும், இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் யாரென்பது கண்டறியப்படவில்லையெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜாய்ஸ்-இ-மொகமட் மற்றும் லக்ஷ்கா-இ-யாங்வி ஆகிய அமைப்புக்கள் இந்தத் தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டிருக்கலாமெனச் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளபோதும் அது இறுதிப்படுத்தப்படவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply