மேர்வின் சில்வாவால் நல்லூரின் புனிதத்திற்கு களங்கம்

நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா யாழ்.நல்லூர் கந்தனை தரிசிக்கச் சென்ற பொழுது உள்வளாகத்திற்குள் பாதணிகளுடன் சென்று வழிபட்டமை மற்றும் ஆலயத்தின் முன் வாயில் வரை வாகனத்தில் சென்றமை போன்ற செயற்பாடுகள் பக்தர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,அமைச்சர் மேர்வின் சில்வா தனிப்பட்ட விஜயமாக நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து நல்லூர் முருகன் ஆலயத்திற்கும், நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயம் மற்றும் நாகவிகாரை போன்ற புனிதத் தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.

குறித்த அமைச்சர் தனது சகாக்களுடன் நல்லூர்க் கந்தனை தரிச்சிக்கச் சென்ற பொழுது வாகனத்தில் ஆலய முன் வீதிக்கு சென்று பாதணிகளைக் கழற்றாது வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.

அதேபோல் அவருடன் சென்றவர்களில் சிலரும் பாதணிகளைக் கழற்றாது ஆலயத்தின் முன் வீதியில் நடமாடி புனிதத் தன்மைக்கு களங்கம் விளைவித்துள்ளனர்.

யாழ்.நல்லூர்க் கந்தனின் வருடாந்த உற்சவம் கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த ஆலய வளாகத்துக்குள் ஆண்கள் மேலங்கிகளை அணிந்து வரக்கூடாது எனவும் அதேபோல் பெண்கள் கலாசார உடைகளுடன் வரவேண்டும் எனவும் யாழ்.மாநகர சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலயத்தின் புனிதத் தன்மையேப் பேணும் நோக்குடனும், சுகாதாரம் பேணும் நோக்குடனும் ஆலயச் சூழலில் சுத்தமான வெள்ளை மணல் பரவப்பட்டுள்ளது. இதேபோல் ஆலயத்தின் புனிதத்தைப் பேணுவதற்காக சில சிறப்பான ஏற்பாடுளும் யாழ்.மாநகர சபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று தனது சகாக்களுடன் குறித்த ஆலய வளாகத்திற்குள் சென்று புனிதத் தன்மைக்கு கேடு விளைவிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்ட பொழுது இந்த விடயங்களுக்கு பொறுப்பான யாழ்.மாநகர சபையின் அதிகாரிகளோ அல்லது அவருடன் சென்ற நபர்களோ சுட்டிக்காட்டவில்லையெனவும் இத்தகைய செயல்கள் இந்துக்களையும், இந்து ஆலயங்களையும் அவமதிப்பதாக அமைகின்றது எனவும் பக்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் இதுபோன்ற செயல்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாத வகையில் யாழ்.மாநகர சபையினர் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply